சென்னை,
தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது. கருத்துக்கணிப்பு வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் நாளை மறுநாள் (23-ம் தேதி) நடைபெற உள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் சுந்தர்ராஜ் வீட்டில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும்படை சோதனைக்கு சென்றபோது தூக்கி வீசப்பட்ட சூட்கேஸில் இருந்த பணத்தை பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பணத்தை பதுக்கி வைத்திருந்ததாகவும், இதுவரை ரூ.46.88 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அ.ம.மு.க. வேட்பாளர் வீட்டில் சோதனை நடைபெற்றுவரும் நிலையில் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.