சாத்தூர்,
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாலை 7 மணி நிலவரப்படி தவெக - 107, திமுக - 59, அதிமுக 47 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆட்சியமைக்க 118 தொகுதிகள் பெரும்பான்மை தேவை. முதல் தேர்தலிலேயே த.வெ.க. மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
தவெகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளநிலையில், ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்கட்சியான அதிமுக பல தொகுதிகளில் பின்னடைவை சந்தித்து வருகிறது. முக்கிய அமைச்சர்களும் தோல்வியை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் 6,050 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளார்.
கடற்கரை ராஜ் (தி.மு.க.) - 59,845 வாக்குகள்
நயினார் நாகேந்திரன் (பா.ஜ.க.) - 53,795 வாக்குகள்
அஜித் ( த.வெ.க.) - 51,093 வாக்குகள்
தற்போது பா.ஜ.க. மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் இருந்தாலும், அ.தி.மு.க. மூலமே அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 2001-2006 அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மின்சாரத் துறை மற்றும் தொழில்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தபிறகு 2019 நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பா.ஜ.க.வில் துணைத் தலைவராக பதவி வகித்த நயினார் நாகேந்திரன், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டார்.
நயினார் நாகேந்திரன்: தேர்தல் வரலாறு
2001-திருநெல்வேலி - வெற்றி
2011- திருநெல்வேலி - வெற்றி
2016 - திருநெல்வேலி - தோல்வி
2021- திருநெல்வேலி - வெற்றி
2026- சாத்தூர் - தோல்வி