கோவை,
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சியினர் தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், மரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தாரை தப்பட்டை முழங்கத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதனிடையே பிரசாரத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட விலையில்லா ஆடு, கறவைப் பசு மாடுகள் மற்றும் நாட்டுக்கோழி வழங்கும் திட்டங்கள் கிராமப்புறப் பொருளாதாரத்தை உயர்த்தின. தற்போது இந்தத் திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரமின்றி தவிக்கின்றனர்” என்று விமர்சித்தார்.
மேலும், தி.மு.க. அரசு காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இத்திட்டங்களை நிறுத்திவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றதும் இந்த மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் உடனடியாக செயல்படுத்தப்படும் என உறுதி அளித்தார்.