தேர்தல் 2026

இடைத்தேர்தலை சந்திக்கும் திருச்சி கிழக்கு தொகுதி?: த.வெ.க. வேட்பாளராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி?

திருச்சி கிழக்கு தொகுதியை தான் விஜய் ராஜினாமா செய்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

திருச்சி,

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். அந்த 2 தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றார். 3 முதல்-அமைச்சர் வேட்பாளரை தேர்ந்தெடுத்து அனுப்பியதை திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் பெருமையாக கருதி வருகிறார்கள். மேலும் விஜய் திருச்சியின் வளர்ச்சியை கருதி திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்யக்கூடாது எனவும் கோரிக்கை வைத்து உள்ளனர்.

ஆனாலும் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை விட சென்னை பெரம்பூர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருப்பதாலும், முதல் தேர்தலிலேயே சென்னை மாவட்டத்தில் அதிக தொகுதிகளில் த.வெ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்று இருப்பதாலும், முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் தொகுதி மக்களை எளிதாக சந்திப்பதற்கு பெரம்பூர் தொகுதியே சாதகமாக இருக்கும் என கருதுவதாலும், விஜய் அந்த தொகுதியை ராஜினாமா செய்ய மாட்டார். திருச்சி கிழக்கு தொகுதியை தான் ராஜினாமா செய்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அவரது கட்சி நிர்வாகிகள் கூறி வருகிறார்கள்.

அப்படி அவர் திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்தால் 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும். மேலும் த.வெ.க.விற்கு ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் உடனடியாக இடைத்தேர்தலை நடத்த வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டு உள்ளது. அப்படி உடனடியாக இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க. வேட்பாளராக யாரை நிறுத்துவார்கள் என்பது குறித்து கேள்வி எழுந்தது.

இந்நிலையில் ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளி யாகி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட அவர் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் நேர்மையாக செயல்படுபவர் என பெயர் எடுத்தவர் ஆவார். மேலும் அவர் மதுரையில் கலெக்டராக பணியாற்றியபோது கனிம வள கொள்ளைக்கு எதிராக ஐகோர்ட்டு உத்தரவின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுத்தவர் ஆவார்.

இவர் தனது பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற பின்னர் ஊழலுக்கு எதிராக இயக்கம் நடத்தி வந்தார். தனது ஆதரவாளர்களை ஒரு தேர்தலில் வேட்பாளர்களாகவும் நிறுத்தி இருந்தார். அவர் திருச்சியில் துணை கலெக்டராக ஏற்கனவே பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே லால்​குடி தொகு​தி​யில் த.வெ.க. சார்​பில் போட்​டி​யிட்டு தோல்​வியடைந்த முன்​னாள் அமைச்​சர் கு.ப.கிருஷ்ணன் அல்​லது அவரது மகன் சிரஞ்​சீவி ஆகியோரில் ஒரு​வரை நிறுத்த வாய்ப்பு உள்​ள​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.