தேர்தல் 2026

சேப்பாக்கம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் உதயநிதி

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுகிறார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணியில் 70 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 164 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. மொத்தம் 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது.

இந்த சூழலில் திமுக சார்பில் போட்டியிடும் 164 வேட்பாளர்களின் பட்டியலை திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். இதன்படி துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட உள்ளார்.

இந்நிலையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தமிழக சட்டசபை தொகுதிகளின் வரிசையின் பட்டியலில் சேப்பாக்கம் தொகுதி 19வது இடத்தில் உள்ளது. இது சென்னையின் முக்கியமான பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது.

கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பின் போது சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய இரண்டு தனி தனி தொகுதிகள் இணைக்கப்பட்டு புதிய தொகுதியாக உருவாக்கப்பட்டது. இந்த தொகுதியில் எம்.ஏ .சிதம்பரம் கிரிக்கெட் மைதானம், சென்னை பல்கலைக்கழகம், எழிலகம் , பார்த்தசாரதி பெருமாள் கோவில், பெரிய மசூதி, பாரம்பரியமான மேன்ஷன்கள் , சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தை, புதுப்பேட்டை வாகன உதிரிபாகன கடைகள் போன்றவை சென்னையில் முக்கிய இடங்கள் பல இங்கு உள்ளன.

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி சேப்பாக்கம் சட்டசபை தொகுதியை பொருத்தவரை 79 ஆயிரத்து 412 ஆண்களும், 84 ஆயிரத்து 396 பெண்களும் மற்றும் 583 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 86 வாக்காளர்கள் உள்ளனர்.

சேப்பாக்கம் தொகுதி நீண்ட காலமாக தி.மு.க.வின் பலம் வாய்ந்த பகுதியாக பார்க்கப்படுகிறது. 1977 மற்றும் 1980, 1984 ஆகிய தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ரகுமான்கான் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றார். 1991இல் காங்கிரஸ் வேட்பாளர் ஜீனத் சர்புதீன் வெற்றி பெற்றார். அதன் பிறகு 1996, 2001 ,2006 ஆகிய தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி தொடர்ந்து வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து 2011 மற்றும் 2016 ஆகிய தேர்தலில் தி.மு.க.வின் ஜெ.அன்பழகன் வெற்றி பெற்றார்.

இந்த சூழலில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அப்போது 93 ஆயிரத்து 285 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த முறை, நடைபெறும் தேர்தலிலும் தி.மு.க. சார்பில் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் ராஜாராம், நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆயிஷா பேகம், தமிழக வெற்றி கழகம் சார்பில் டி. செல்வம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.