சென்னை
தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது. தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளை முடித்து, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழகத்தில் 4 முனைப்போட்டி காணப்படுகிறது.
இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, மத்திய மந்திரி பியூஷ் கோயல் உள்ளிட்டோர் ஏற்கனவே வாக்கு சேகரித்து சென்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள சூழலில், மத்திய மந்திரிகள் தமிழகத்திற்கு வருகை தந்து தங்களுடைய கூட்டணிக்கு ஆதரவாக தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்றிரவு கோவைக்கு வருகிறார். அவர், நாளை ஈரோடு மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட சிவகிரியில் வாக்கு சேகரிக்கிறார். இதனையடுத்து, கோவையில் இருந்து சென்னைக்கு வரும் அவர், மயிலாப்பூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.