தேர்தல் 2026

தவெகவின் முழு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமையான தேர்தல் அறிக்கையை விஜய் இன்று வெளியிட்டார்.

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனல் பறக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கவர்ச்சிகர வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையையும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வெளியிட்டுள்ளன.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்களைச் சந்திக்கும்போது, அவர்களுக்கான செயல்திட்டங்களை அறிவித்து வந்தார். இந்த நிலையில் இன்று தவெகவின் முழுமையான தேர்தல் அறிக்கையை விஜய் வெளியிட்டார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் 'மக்களின் தேர்தல் அறிக்கை' என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை விவசாயி நாராயணன் என்பவரிடம் வழங்கினார். தொடர்ந்து ஆசிரியை, ஆட்டோ ஓட்டுநர், அங்கன்வாடி ஊழியர், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி, திருநங்கை ஆகியோரிடம் தேர்தல் அறிக்கை பிரதிகளை வழங்கினார்.