தேர்தல் 2026

அதிமுக - பாஜக கூட்டணியை வெற்றி பெற வைப்பதுதான் விஜய்யின் நோக்கம் - திருமாவளவன்

விசிக மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டதற்கு கூட்டணி கட்சிகளும் காரணம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்,

கும்பகோணம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சாக்கோட்டை க.அன்பழகனை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டதற்கு வாக்கு ஒரு காரணமாக இருந்தாலும், கூட்டணி கட்சிகளும் காரணம். தவிர்க்கமுடியாத கட்சியாக விடுதலை சிறுத்தைகள் இருக்கின்றது என்றால் அதற்கு காரணம் திமுகவும், கூட்டணி கட்சிகளும்தான். தமிழகத்தில் 8 தொகுதிகளில் போட்டியிடும் நாம், வெற்றி பெற வேண்டும் என கூட்டணி கட்சிகள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கின்றார்கள். ஆகவே, திமுக தோழமைக் கட்சி வேட்பாளர்களை நாம் வெற்றி பெற வைக்க வேண்டும்.

பாஜக - அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் கொள்கை அடிப்படையில் உறவு இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றார். ஆனால் அவர் காலமாகி விட்டார் என்ற துணிச்சலில் பாஜகவுடன், பழனிசாமி கூட்டணி வைத்துள்ளார். இது ஜெயலலிதாவிற்கு செய்த துரோகமாகும்.

திமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என பாஜக திட்டமிட்டு, நண்பர் விஜய்யை களமிறக்கி விட்டுள்ளது. நண்பர் விஜய், கட்சி தொடங்கி 3 ஆண்டுகளில் இதுவரை அவர் பேசியது, திமுக வெறுப்பு, திமுக பற்றி தான் பேசியுள்ளார். ஆனால் விஜய், மோடி, அமித்ஷா ஆகியோரையும், சமத்துவம், சகோதரத்துவம் உள்ளிட்டவைகளை பற்றி பேசவில்லை. அவர் பாஜக கொள்கை எதிரி என்ற ஒரு வார்த்தை தவிர வேறு எதுவும் பேசமாட்டார்.

அதிமுக - பாஜக கூட்டணியை வெற்றி பெற வைத்து ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்பது தான் விஜய்யின் நோக்கமாகும். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் வாக்கு திமுக கூட்டணிக்கு சென்று விடக்கூடாது என களம் இறக்கி விடப்பட்டவர் விஜய். அவருக்கு வாக்கு செலுத்தினால், பாஜகவிற்கு செலுத்துவதாகும். பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் முகமூடி அணிந்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.