தேர்தல் 2026

தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் - அண்ணாமலை

பெண்களின் முன்னேற்றத்திற்கு எதிரான திமுக, காங்கிரஸ் கட்சிகளை தமிழக சகோதரிகளும், தாய்மார்களும் விரட்டியடிக்க வேண்டும்.

ஸ்ரீரங்கம்,

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

கடந்த 5 ஆண்டுகளாக, தமிழக மக்கள் அனுபவித்து வரும் தீயசக்தி திமுகவின் காட்டாட்சியில், பெண்களுக்கு பாதுகாப்பில்லை, மக்களுக்கு நிம்மதியில்லை, தமிழகத்தில் வளர்ச்சியில்லை. இந்நிலையை மாற்றி தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், மக்களுக்கான நல்லாட்சி வழங்க வேண்டும் என்ற உறுதியோடு தேர்தல் களத்தில் வெற்றி நடைப்போட்டு வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நமது அதிமுக வெற்றி வேட்பாளர் ஆர்.மனோகரனை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.

ஶ்ரீரங்கத்தின் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, அதிகளவில் கனிம வளங்களை கொள்ளையடித்தது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி நிருபரை கொலைவெறியோடு தாக்கினார். திண்டுக்கல்லில் காணாமல் போன கருப்பசாமி என்பவரின் சடலம் இவரது குவாரியில் இருந்து மீட்கப்பட்டதையும் நாம் பார்த்தோம். மேலும், திமுக மூத்த தலைவர் திருச்சி சிவாவின் வீட்டில் தாக்குதல் நடத்தியதும் இவர் தான். இவருக்கு மீண்டும் வாய்ப்பளித்தால் திமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்பதை அறிந்து இவருக்கு வாய்ப்பளிக்கவில்லை. ஆனால், ஶ்ரீரங்கம் மக்கள் திமுகவில் யார் நின்றாலும் அவர்களுக்கு படுதோல்வியை நிச்சயம் பரிசளிக்க காத்திருக்கிறார்கள்.

பெண்களுக்கு பாராளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் 33% இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதற்காக மத்திய பாஜக அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தத்தை திமுகவும், காங்கிரஸ் கட்சியும் கூட்டுச்சதி செய்து தோற்கடித்திருக்கிறார்கள். பெண்களின் முன்னேற்றத்திற்கு எதிரான திமுக, காங்கிரஸ் கட்சிகளை தமிழக சகோதரிகளும், தாய்மார்களும் விரட்டியடிக்க வேண்டும்.

தமிழக மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைந்திட, தமிழகம் வளர்ந்திட தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நமது அதிமுக வெற்றி வேட்பாளர் ஆர்.மனோகரனை மக்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லட்டும்! ஶ்ரீரங்கம் செழிக்கட்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.