தேர்தல் 2026

சசிகலா-ராமதாஸ் கூட்டணியால் பாதிப்பா..? - டி.டி.வி.தினகரன் பதில்

த.வெ.க. தலைவர் விஜய், விஜயகாந்த் போல அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

மதுரை,

அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியில், அ.ம.மு.க.வுக்கு நாங்குநேரி, ஒட்டப்பிடாரம், சைதாப்பேட்டை, மடத்துக்குளம், பூந்தமல்லி, திருச்சி மேற்கு, பெரியகுளம், மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி, திருப்பத்தூர் ஆகிய 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மதுரையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

த.வெ.க. தலைவர் விஜய், மறைந்த விஜயகாந்த் போல அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார். தி.மு.க.வுக்கு தான் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவார். தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமைந்திருந்தால் பாதிப்பு இருந்திருக்கும். தற்போது த.வெ.க.வால் பாதிப்பு என்பது ஆளுங்கட்சிக்கே ஏற்படும். அதனால் தான் கூடுதல் தொகுதிகளில் திமுக நிற்கிறது. அ.தி.மு.க. தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

அண்ணாமலை என்னிடம் பேசியபோது நான் தேர்தலில் போட்டியிடவில்லை என கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன் என கூறினார். நான் போட்டியிடாதது குறித்தும் பல கருத்துக்களை கூறினார்கள். தேர்தலில் போட்டியிடாதது அண்ணாமலையின் தனிப்பட்ட முடிவு. இதில் அழுத்தம் ஏதும் இருக்கும் என நினைக்கவில்லை.

சசிகலா-ராமதாஸ் கூட்டணி எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. அத்தி பூத்தது போல் அவர்களது ஆதரவு வேட்பாளர் ஏதாவது ஒரு தொகுதியில் ஓட்டு வாங்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைதொடர்ந்து, குற்ற வழக்குகள் உள்ளவர்கள் பயத்தால் சேர்ந்த கூட்டணி என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், அக்யூஸ்ட் என்பதற்கும் குற்றவாளி என்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் முதல்-அமைச்சர் பேசிக்கொண்டுள்ளார். ஊழல் லஞ்சம் திமுக ஆட்சியில் அதிகமாக நடைபெற்றுள்ளது. திராவிட மாடல் சீட்டிங் மாடல் என மாறிக்கொண்டுள்ளது. முதல்-அமைச்சர் தோல்வி பயத்தில் உள்ளார். எதேதோ பேசிக்கொண்டுள்ளார் என கூறினார்.