சென்னை,
தமிழ்நாட்டின் வருவாயைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து பரிந்துரை அளிக்க பொருளாதார நிபுணரும், மத்திய திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவருமான மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிதித்துறை செயலாளர் எம்.ஏ.சித்திக் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மாநிலத்தின் வரி மற்றும் வரி அல்லாத வருவாயை அதிகரிக்கவும், வருவாய் கசிவுகளைத் தடுத்து நிதி ஆதாரங்களை மேம்படுத்தவும், மத்திய திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் 6 பேர் கொண்ட வருவாய் மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் உறுப்பினர்களாக பேராசிரியர் கே.பி.கிருஷ்ணன், வரி கொள்கை நிபுணர் அரவிந்த் மோடி, முன்னாள் ஐஆர்எஸ் அலுவலர் நஜீப் ஷா, நிதித்துறை செயலர் எம்.ஏ.சித்திக், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் எம்.சுரேஷ் பாபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவானது மாநிலத்தின் நிதித் தற்சார்பை வலுப்படுத்துதல், வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்களை உருவாக்குதல், வரி விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதை மேம்படுத்துதல், வருவாய் கசிவுகளைத் தடுத்தல், வரி விகிதங்கள், கட்டணங்கள் மற்றும் வரி விலக்குகளை முறைப்படுத்துதல், அத்துடன் புதிய மற்றும் இதுவரை முழுமையாகப் பயன்படுத்தப்படாத வருவாய் ஆதாரங்களை கண்டறிதல் ஆகியவற்றின் மூலம் மாநிலத்தின் வரி மற்றும் வரி அல்லாத வருவாயை நிலையாக அதிகரிப்பதற்கான வழிமுறைகளை மாநில அரசுக்கு 3 மாதங்களில் பரிந்துரைக்கும்.
இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக நிதித்துறை இணைச் செயலர் ராஜகோபால் சுங்கரா செயல்படுவார். தேவைப்பட்டால் டாஸ்மாக், பத்திரப்பதிவு, கனிம வளம், வணிக வரி மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளுக்கு தனித்தனி துணைக் குழுக்களை அமைத்துக் கொள்ளலாம். மேலும், எந்தவொரு அரசுத் துறை அல்லது அதிகாரிகளிடம் இருந்தும் நேரடியாக ஆவணங்கள் மற்றும் தரவுகளைக் கோரும் அதிகாரமும் இக்குழுவுக்கு தரப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.