Trending

மருத்துவப் படிப்புக்கான கட்-ஆப் மதிப்பெண் எப்படி இருக்கும்? - கல்வியாளர் விளக்கம்

எஸ்.சி., எஸ்.சி.ஏ. பிரிவினருக்கு 15 மதிப்பெண்ணும் கடந்த ஆண்டைவிட அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

சென்னை,

தரவரிசை பட்டியல்

மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து கலந்தாய்வு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் தற்போதுள்ள சூழலில், கட்-ஆப் மதிப்பெண் எப்படி இருக்கும்? என்பது குறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி விளக்கம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

அரசு கல்லூரிகளில் பொதுப்பிரிவில் ஓ.சி., பி.சி. பிரிவினருக்கு 29 முதல் 30 மதிப்பெண்கள் வரையிலும், எஸ்.சி., எஸ்.சி.ஏ. பிரிவினருக்கு 15 மதிப்பெண்ணும் கடந்த ஆண்டைவிட அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. காரணம் 650 மதிப்பெண்ணுக்கு மேல் கடந்த ஆண்டில் 4 பேர் இருந்த நிலையில், நடப்பாண்டில் 121 பேர் எடுத்துள்ளனர்.

கட்-ஆப் மதிப்பெண்

அதேபோல், 600-க்கு மேல் கடந்தாண்டில் 111 பேர், நடப்பாண்டில் 728 பேர், 550-க்கு மேல் கடந்தாண்டில் 858 பேர், நடப்பாண்டில் 2,568 பேர், 500-க்கு மேல் 3,968 பேர் கடந்த ஆண்டில் எடுத்திருந்த நிலையில், நடப்பாண்டில் 6,366 பேர், 400-க்கு மேல் கடந்த ஆண்டில் 15,517 பேர், நடப்பாண்டில் 16,964 பேர் எடுத்திருக்கிறார்கள்.

மேலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், அரசு கல்லூரிகளின் பொதுப்பிரிவு கலந்தாய்வில் ஒ.சி. பிரிவினர் 577 முதல் 579 மதிப்பெண்ணும், பி.சி. பிரிவினர் 538 முதல் 540 மதிப்பெண்ணும், பி.சி. முஸ்லிம் பிரிவினர் 532 முதல் 534 மதிப்பெண்ணும், எம்.பி.சி. பிரிவில் 522 முதல் 524 மதிப்பெண்ணும், எஸ்.சி. பிரிவினர் 459 முதல் 461 மதிப்பெண்ணும், எஸ்.சிஏ பிரிவினர் 409 முதல் 411 மதிப்பெண்ணும், எஸ்.டி. பிரிவினர் 415 முதல் 417 மதிப்பெண்ணும் எடுத்தால் மருத்துவப் படிப்பில் 'சீட்' கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.