சுப காரியம், துக்க வீடு என நிகழ்வின் மையக்கரு எதுவாக இருந்தாலும், அனைவருக்கும் பொதுவாக மது பரிமாறப்படுவதுதான் இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கிறது. ஊர் ஓரம் ஒதுங்கி இருந்த மதுக்கடைகள் இன்றைக்கு ஊர் நடுவில், தெருவுக்குத் தெரு வந்துவிட்டன.
இதற்குக் காரணம் மக்களுடைய கலாச்சாரம் மாறி அனைவரும் குடிக்கு அடிமையாகிவிட்டார்கள் என்று சொல்ல முடியுமா?
சரி. இந்தக் கலாச்சார மாற்றம்... இப்போதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு வந்திருக்கிறதா?
இல்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே இருந்திருக்கிறது. இதற்காகத்தான் வள்ளுவரே எழுதியிருக்கிறார்:
``உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.``
இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
நீங்கள் சான்றோரால் மதிக்கப்பட வேண்டும் என்றால், மற்ற மக்களால், உங்கள் சக நண்பர்களால், உறவினர்களால் மதிக்கப்பட வேண்டும் என்றால், கள் என்ற மதுவை நீங்கள் குடிக்கக் கூடாது என்கிறார் வள்ளுவர்.
மதுவைக் குடித்துவிட்டு உங்களால் சில மணி நேரம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஆனால் மரியாதையாக இருக்க முடியுமா? முடியாது.
ஆனால் இன்றைக்கு இளைய சமுதாயத்திடம் கேட்டால் மது குடித்துவிட்டு மகிழ்ச்சியோடு இருப்பதுதான் மரியாதை என்பார்கள். அந்த அளவுக்கு மதுப்பழக்கம் ரொம்ப சகஜமான ஒன்றாகிவிட்டது.
மது குடிப்பதால் உடல் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள் என இப்படி எத்தனையோ பிரச்சினைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இந்தப் பிரச்சினைகளை எல்லாம் மறப்பதற்காகத்தான் மது குடிக்கிறோம் என்று சொல்கிற ஒரு கூட்டமும் தமிழ்நாட்டில் இருக்கிறது.
நம் உடலில் உள்ள கல்லீரலை கழுதைக்கு ஒப்பிடுவார்கள். கழுதைக்கு எவ்வளவு சுமை ஏற்றினாலும் அது பாட்டுக்கு சுமந்துகொண்டே இருக்கும். ஆனால் அந்தக் கழுதை படுத்துவிட்டால், மீண்டும் எழுந்திருக்கவே எழுந்திருக்காது.
கல்லீரலும் நம்முடைய உடலில் வெட்ட வெட்ட வளர்கிற நகம் மாதிரி. கல்லீரல் ஒரு அபூர்வமான உறுப்பு.
நீங்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்கும். எவ்வளவு குடித்தாலும் தாங்கும். ஒரு அளவுக்கு மேல் கெட்டுப்போய்விட்டால் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவது கடினம்.
கல்லீரல் மட்டும் இல்லை. குடிப் பிரச்சினையால் குடிநோய்கள் இன்றைக்கு தமிழ்நாட்டில் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.
ஒரு காலத்தில் எங்கு பார்த்தாலும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு விளம்பரங்கள் இருக்கும். 2010-க்குப் பிறகு இத்தகைய விளம்பரம் எங்குமே இல்லை. ஏனென்றால், எய்ட்ஸ் குறித்து எல்லா தலைமுறைக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது. அத்தகைய விழிப்புணர்வு மது விஷயத்தில் ஏற்படவில்லை.
அன்றாடம் நாட்டில் நடக்கிற கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. நடு ரோட்டில் 10 பேர் சேர்ந்து அசால்ட்டாக ஒருவரை வெட்டிச் சாய்த்துவிட்டுப் போகிறார்கள். இதில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் 15 முதல் 20 வயதுக்குள் இருக்கும் சிறுவர்கள்தான்.
இவர்களை எது இவ்வளவு தைரியமாகச் செய்யத் தூண்டுகிறது என்று போலீசார் கவனித்தபோது, அடிப்படையே மதுதான்.
மது தன் உடல்நலம் சார்ந்து மட்டுமில்லாமல், இந்தச் சமூகம் சார்ந்தும் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குகிறது.
தமிழ்நாட்டில் சமீபத்தில் முதலமைச்சர் விஜய் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு விட்டார். ஆனால் அதற்குப் பிறகும் 4,000 கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் மது நுகர்வு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 2003-ல்தான் தமிழக அரசே மதுவிற்பனையை ஏற்று நடத்தும் என்று ஒரு அறிவிப்பு கொடுத்தார்கள். அந்த ஆண்டு அரசுக்குக் கிடைத்த வருவாய் எவ்வளவு தெரியுமா? ரூ.3,640 கோடி. கடந்த 2024-25-ல் எவ்வளவு வருமானம் தெரியுமா? சொன்னால் மலைத்துப் போவீர்கள். ரூ.48,500 கோடி.
இந்த ஆண்டு ரூ.55,000 கோடி தாண்டும் என்று நம்முடைய அமைச்சர் சட்டசபையில் சொல்லியிருக்கிறார். இன்றைக்கு அரசு நடப்பதே மதுவின் வருமானத்தில்தான்.
எப்படி இதை இழக்க மனம் வரும்? இதற்கு என்னதான் விடிவு?
மது தரும் வருமானத்தை மட்டுமே வைத்து அரசு நடத்த வேண்டும் என்றால், அதற்கு மாற்று ஏற்பாடு என்ன? மக்களுடைய மனமும் மாற வேண்டும்.
எந்த அரசு வந்தாலும் எதைத் தள்ளுபடி செய்வார்கள்? எதை இலவசமாகத் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே வந்துவிட்டது. அந்தப் பணத்துக்கு அரசு எங்கே போகும் ?
மது என்ற ஒரு போதைவஸ்து மூலம் உங்களிடம் இருந்து வரும் பணத்தைத்தான் அரசு திருப்பி மக்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறது என்பதை நீங்கள் எப்போது ஒத்துக்கொள்கிறீர்களோ, அன்றைக்குத்தான் ஒரு மாற்றம் வரும்.
மதுவால் மக்களிடையே மரபணு மாற்றமும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இன்றைக்கு மது ஆறாக ஓடுகிறது. மதுவிலக்கு கொண்டு வந்தால் அரசுக்குப் பணம் கிடைக்காமால் அரசை நடத்த முடியாமல் போய்விடுமா?
இல்லை.. “மது வேண்டாம்” என்று சொன்னாரே காந்தி. அவர் பிறந்த குஜராத்தில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக மதுவிலக்கு இருக்கிறது. அங்கு சாத்தியம் என்றால் ஏன் தமிழ்நாட்டில் சாத்தியம் இல்லை?
அரசாங்கம் நினைத்தாலும் மதுவை அடியோடு ஒழிக்க முடியும்... தனி மனிதன் நினைத்தாலும் மதுப்பழக்கத்தில் இருந்து விலகி இருக்க முடியும். அது எப்படி என்பதை அறிந்து கொள்ள, கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து வீடியோவை முழுமையாகப் பாருங்கள்.