இந்திய கிரிக்கெட் அணியின் 2008 இலங்கை டெஸ்ட் தொடரில் வீரேந்திர சேவாக் தனியொருவனாய் செய்த சம்பவத்தைப் பற்றித்தான் இதில் நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
அணில் கும்ப்ளே தலைமையிலான இந்திய அணி கடந்த 2008-ம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. கும்ப்ளே, ஹர்பஜன் மாதிரியான சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து துணைக் கண்ட பிட்சுகளில் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலகட்டம் அது. ஆனால், 2008 இலங்கை தொடரில், இந்தியா அப்படியொரு மிரட்டலை சந்தித்தது என்று தான் சொல்ல வேண்டும்.
கொழும்புவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 239 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவுகிறது. அந்த காலகட்டத்தில் சச்சின், சேவாக், டிராவிட், கங்குலி, லக்ஷ்மண் என இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவாக இருந்தது. ஆனால், இந்த பேட்டிங் ஆர்டருக்கு இலங்கையின் முரளிதரன் - அஜந்தா மெண்டிஸ் சுழல் கூட்டணி கடுமையான சோதனையைக் கொடுத்தனர்.
முரளி ஒரு புறம் என்றால், அப்போதுதான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியிருந்த `மிஸ்ட்ரி ஸ்பின்னர்’ அஜந்தா மெண்டிஸ் இன்னொரு புறம் என கூட்டணி போட்டு இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை பதம் பார்த்தனர். முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் 20 விக்கெட்டுகளில் 19 விக்கெட்டுகளை எடுத்தது இந்தக் கூட்டணி தான். இப்படியான சூழ்நிலையில் இரண்டாவது போட்டிக்காக காலே சென்றடைந்தது இந்திய அணி.
2008 ஜூலை 31 - மோசமான தோல்விக்குப் பிறகு டாஸ் போடுவதற்காக சென்ற இந்திய அணியின் கேப்டன் கும்ப்ளே, டாஸை ஜெயித்து இந்தியா பேட்டிங் தேர்வு செய்வதாக அறிவிக்கிறார். கும்ப்ளேவின் இந்த முடிவு ரசிகர்கள் தொடங்கி வர்ணனையாளர்கள் வரையில் புருவம் உயர்த்தச் செய்தது. இதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை.
முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸில் அடித்த 600 ரன்களை இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து இந்திய அணியால் எடுக்க முடியாமல் திணறியிருந்தது நமது பேட்டிங் ஆர்டர். இப்படியான சூழலில், யாருமே எதிர்பார்க்காத வகையில் கும்ப்ளே பேட்டிங்கை தேர்வு செய்தது எப்படி என்ற கேள்வியும் விமர்சனமும் அப்போது எழுந்தது. ஆனால், பிளேயிங் லெவனில் இருந்த ஒரே ஒரு வீரருடைய கணக்கோ வேறு மாதிரி இருந்தது.
அது நம்ம வீரேந்திர சேவாக். முதல் டெஸ்டில் வர்ணனையாளராக இருந்த ஜெஃப்ரி பாய்காட், சேவாக்கை சீண்டும் வகையில் ஒரு கமெண்ட் அடித்திருந்தார். `சேவாக் திறமையானவர் தான். ஆனால், மூளையில்லாதவர்’ என அவர் கருத்துத் தெரிவித்திருந்தது ஊடகங்கள் தொடங்கி ரசிகர்கள் வரையில் மிகப்பெரிய அளவில் விவாதப் பொருளாகியிருந்தது. இந்த சூழ்நிலையில், காலே டெஸ்டில் இந்தியா பேட் செய்யத் தொடங்கியிருந்தது. முதல் செஷனில் விக்கெட்டே இல்லாமல் பார்த்துக் கொண்டது சேவாக் - கம்பீர் இணை. முதல் விக்கெட்டுக்கு கம்பீர் உடன் இணைந்து 167 ரன்களை சேர்க்கிறார் சேவாக். வழக்கமான அதிரிபுதிரி ஷாட்கள்தான்… ஆனால், இந்த முறை கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடனேயே ஆடுகிறார் சேவாக்.
முரளி - மெண்டிஸ் பந்துவீச்சை ஜாக்கிரதையாகவே கையாண்ட அதேநேரம் சேவாக், தன்னோட ஆக்ரோஷத்தையும் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கவே இல்ல. 50 பந்துகளில் அரைசதம் அடித்த சேவாக், 87 பந்துகளிலேயே சதமடித்தார். முதல் இன்னிங்ஸின் 32-வது ஓவரில் கவுதம் காம்பீர் அவுட் ஆக, அதன் தொடர்ச்சியாக 34-வது ஓவரிலேயே டிராவிட்டும் நடையைக் கட்டுகிறார். அடுத்து 36-வது ஓவரை வீச வந்த சமிந்தா வாஸ், அந்த ஒரே ஓவரில் சச்சின் - கங்குலி என இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின்னர், வி.வி.எஸ்.லஷ்மண் உடன் இணைந்து முதல் நாள் அடுத்து எதும் விக்கெட் விழாமல் பாத்துக் கொண்டார் சேவாக்.
இரண்டாவது நாளில் ஒருமுனையில் விக்கெட்டுகள் வரிசையாக விழத் தொடங்கவே, மறுபுறம் ஒரு தனது டெஸ்ட் கரியரின் ஒரு முக்கியான இன்னிங்ஸை ஆடிக் கொண்டிருந்தார் சேவாக். 144 பந்துகளில் 150 ரன்களைக் கடந்த சேவாக்குக்கு எதிர்முனையில் கைகொடுக்க ஆளில்லாத காரணத்தால், தனது ஆக்ரோஷ ஆட்டத்தின் வேகத்தை சேவாக் குறைத்துக் கொண்டார். 167 ரன்களுக்கு விக்கெட்டே இல்லாமல் இருந்த இந்திய அணி, இறுதியில் 329 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அதில் சேவாக்கின் பங்கு மட்டும் 201 ரன்கள். இதை அவர் 231 பந்துகளில் அடித்திருந்தார். மொத்த இந்திய அணியிலும் சேவாக் தவிர்த்து கம்பீர் - லக்ஷ்மண் என இரண்டே இரண்டு பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டியிருந்தனர். மற்ற எல்லா பேட்டர்களுமே ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆகியிருந்தனர். எதிர்கொண்ட பந்துகளின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால், சேவாக் தவிர்த்து நான்கே நான்கு பேட்டர்கள் தான் இரட்டை இலக்கத்தில் பந்துகளை எதிர்க்கொண்டிருந்தனர். இவ்வாறு இந்திய அணியின் பெரும்பாலான பேட்டர்களால் தாக்குப்பிடிக்க முடியாத ஒரு பந்துவீச்சை எதிர்த்து நின்றதோடு, ஆக்ரோஷமான எதிர்த் தாக்குதலும் கொடுத்து சேவாக் மிரட்டியிருந்தார். அந்த போட்டியில், முதல் இன்னிங்ஸில் சேவாக், இரண்டாவது இன்னிங்ஸில் இஷாந்த் ஷர்மாவின் மிரட்டல் பௌலிங் கைகொடுக்க இந்திய அணி, 170 ரன்கள் வித்தியாசத்தில் அந்தப் போட்டியை வென்று தொடரை சமன் செய்தது இந்திய அணி.