விநாயகர் 
Video

அனலாசுரனை வதம் செய்த விநாயகர்! காசியப முனிவர் அற்புதம்

விநாயகரின் உஷ்ணத்தை தணிப்பதற்காக காசியப முனிவர் 21 அருகம்புற்களை எடுத்து விநாயகரின் தலையில் வைத்தார்.

தினத்தந்தி

தமிழர்களின் வழிபாட்டில் முதன்மைக் கடவுளாகக் கருதப்படுபவர் விநாயகர். எந்த ஒரு நல்ல காரியத்தைத் தொடங்கினாலும் முதலில் விநாயகரை வணங்குவது நம் வழக்கம். அதனால்தான் எந்த ஒரு செயலையும் தொடங்கும்போது முதலில் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குகிறோம்.

விநாயகரை வழிபட்டால் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை நம் மக்கள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

அப்படிப்பட்ட விநாயகருக்கு மிகவும் பிடித்தமான பொருள் எது என்று கேட்டால், பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது அருகம்புல்.

இந்த அருகம்புல் பின்னால் இருக்கும் புராணக் கதையை இப்போது பார்க்கலாம்.

நெருப்பை கக்கும் அனலாசுரன்

பழங்காலத்தில் அனலாசுரன் என்ற அசுரன் இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அனல் என்றால் நெருப்பு.

அனலாசுரனின் உடலில் இருந்து எப்போதும் நெருப்பு வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். அவனை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. தேவர்களையும் முனிவர்களையும், மக்களையும் துன்புறுத்தி வந்தான். இதனால் தேவர்கள் அனைவரும் விநாயகரிடம் சென்று, “விநாயகரே, நீங்கள்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று வேண்டினர்.

அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட விநாயகர், அனலாசுரனை எதிர்த்து போருக்குச் சென்றார். அனலாசுரன் பல்வேறு ஆயுதங்களைப் பயன்படுத்தினான்.

ஆனால் விநாயகர் அவற்றை எல்லாம் எதிர்கொண்டு, இறுதியில் அனலாசுரனை அடக்கினார். அதன்பிறகு, அனலாசுரனை ஒரு சிறிய உருவமாக மாற்றி விழுங்கியதாக புராணக் கதை கூறுகிறது. ஆனால் பிரச்சினை அங்கேதான் தொடங்கியது.

காசியபரால் நிகழ்ந்த அற்புதம்

அனலாசுரன் விநாயகரின் வயிற்றுக்குள் சென்ற பிறகும் தனது நெருப்புத் தன்மையை வெளிப்படுத்தத் தொடங்கினான். இதனால் விநாயகரின் உடலில் கடுமையான வெப்பமும், வயிற்றில் எரிச்சலும் ஏற்பட்டது.

விநாயகரின் உடல் வெப்பத்தைத் தணிக்க தேவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். மழை பெய்யச் செய்தனர். சந்தனம் பூசினர். பார்வதி தேவி பாற்கடலை விநாயகரின் பக்கம் திருப்பியதாகவும் ஒரு புராணக் கதை கூறுகிறது.

சிவபெருமான் குளிர்ச்சியைத் தரும் பாம்பை விநாயகரின் இடுப்பில் கட்டினார். ஆனால் விநாயகரின் உடல் வெப்பம் குறையவில்லை.

அப்போது தேவர்கள் காசியப முனிவரிடம் சென்றனர். காசியப முனிவர், விநாயகரின் நிலையைப் பார்த்து, 21 அருகம்புற்களை எடுத்து விநாயகரின் தலையில் வைத்தார்.

அவ்வளவுதான், உடனே விநாயகரின் உடல் வெப்பம் தணிந்ததாகப் புராணம் கூறுகிறது.

இதன் காரணமாகவே விநாயகரின் வழிபாட்டில் அருகம்புல் முக்கியமான இடத்தைப் பெற்றது.

SCROLL FOR NEXT