வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு..?
குறிப்பிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.;
சென்னை,
சென்னையில் கடந்த சில நாட்களாகவே கணிக்க முடியாத அளவுக்கு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதேபோல இதற்கு நேர் எதிராக சீரான இடைவெளியில் வெயிலும் சுட்டெரித்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் சில இடங்களில் மிதமான மழை பெய்தது. இதற்கு மாறாக நேற்று பகல் நேரங்களில் வெயில் கொளுத்தியது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஆகியவற்றின் காரணமாக இன்று (வியாழக்கிழமை) முதல் 14-ந் தேதி வரை 6 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.