ப்ளாஷ்பேக்: 2025-ல் உலக அளவில் அதிக வசூல் செய்த டாப்-10 தமிழ் படங்கள்
2025 ஆம் ஆண்டில் உலக அளவில் அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.;
சென்னை,
மறக்க முடியாத பல நினைவுகள், திருப்பங்களை கொடுத்த 2025 ஆம் ஆண்டு இன்னும் சில தினங்களில் நிறைவு பெறுகிறது. 2025 நிறைவு கட்டத்தில் இருக்கும் நாம், இன்னும் சில நாட்களில் புத்தாண்டை வரவேற்க இருக்கிறோம். ஆண்டின் நிறைவு தருவாயில் இருக்கும் இந்த நேரத்தில் நடப்பு ஆண்டில் உலக அளவில் அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
1) கூலி
தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசூல் மன்னனாக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் இந்த ஆண்டு ‘கூலி’ திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. எனினும், உலக அளவில் ‘கூலி’ படம் வசூலை வாரி குவித்தது. ‘கூலி’ படம் ரூ.518 கோடி வரை வசூல் செய்து, 2025 ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த படங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது.
2) குட் பேட் அக்லி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இந்த ஆண்டு விஜய் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், திரை ரசிகர்களுக்கு விருந்தாக இந்த படம் அமைந்தது. அஜித் ரசிகர்களுக்கு ஒரு பக்கா கமர்சியல் விருந்தாக அமைந்த இந்த படத்தில், அஜித்தின் பழைய திரைப்படங்களின் ரெபரன்ஸ் காட்சிகள் இருந்தன. இது அஜித் ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் ரூ.248.25 கோடி வரை வசூலித்ததாக சொல்லப்படுகிறது.
3) டிராகன்
‘லவ் டுடே’ படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியால் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் ‘டிராகன்’ திரைப்படம் இந்த ஆண்டு வெளியானது. ‘டிராகன்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் அதிகம் வசூலித்த தமிழ் படங்களில் 3-வது இடத்தை பிடித்துள்ளது. சுமார் ரூ.37 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம், உலகளவில் ரூ.150 கோடி வசூலித்தது.
4) விடா முயற்சி
பல ஆண்டுகள் படப்பிடிப்புக்குப் பிறகு, இந்த ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘விடா முயற்சி’. மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித்குமார் - திரிஷா நடிப்பில் உருவான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும், உலகளவில் மொத்தம் ரூ.138 கோடி வசூலித்ததாக, படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
5) டியூட்
இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் ‘டியூட்’. அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் ஆகியோர் இப்படத்தில் நடித்தனர். ‘லவ் டுடே’, ‘டிராகன்’ ஆகிய வரிசையில் 100 கோடி வசூலித்து ‘டியூட்’ சாதித்தது. பிரதீப் ரங்கநாதனுக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த இந்த படத்தின் மொத்த வசூல் 113 கோடியாகும்.
6) மதராசி
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ஆக்ஷன் திரைப்படம்தான் ‘மதராசி’. ‘அமரன்’ கொடுத்த மிகப்பெரிய ஹிட்டிற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த இந்த படம், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான ‘மதராசி’ திரைப்படம் 99.12 கோடி வசூலை மட்டுமே பெற்றது. பெரும் எதிர்பார்ப்புடன் வந்த இந்த படம், ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தையே கொடுத்தது எனலாம்.
7) ரெட்ரோ
சூர்யாவின் 44-வது படமாக மே மாதம் வெளியான படம் ‘ரெட்ரோ’. ‘கங்குவா’ படம் கொடுத்த தோல்வியால், பெரும் வெற்றி எதிர்பார்ப்புடன் இந்த படம் வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படம் உலகளவில் ரூ.97.35 கோடி வசூலித்துள்ளது.
8) டூரிஸ்ட் பேமிலி
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சிறந்த பேமிலி எண்டர்டெயின்மென்ட் படமாக அமைந்தது. வெறும் ரூ.7 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பல மடங்கு வசூலை குவித்தது. உலக அளவில் சுமார் ரூ86 கோடி வசூல் செய்த இந்த படம், சசிகுமாரின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது.
9) தலைவன் தலைவி
விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமாக உருவான ‘தலைவன் தலைவி’ படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். ஜூலை மாதம் வெளியான இந்த படம், உலக அளவில் ரூ.85 கோடிக்கும் மேல் வசூல் குவித்தது.
10) மாமன்
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவான படம் ‘மாமன்’. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இந்த படம் தயாரானது. சிறந்த குடும்ப திரைப்படமாக வெளியான இந்த படம் ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமாக அமைந்தது. இப்படம் ரூ.41.15 கோடி வசூல் குவித்தது. இதன்மூலம் இப்பட்டியலில் இப்படம் 10-ஆம் இடத்தை பிடித்துள்ளது.