மனதுக்கு பிடித்த தொழிலில் அசத்தும் பல் மருத்துவர்

தங்களுடைய திறமை எதுவோ, அதையே மூலமாக வைத்து தொழில் தொடங்க வேண்டும். மற்றவர்களைப் பார்த்து தொழில் தொடங்க நினைக்கக்கூடாது. தொழிலில் வரும் லாபத்தில் ஒரு பங்கை, அதை சந்தைப்படுத்துவதற்காக ஒதுக்க வேண்டும்.
மனதுக்கு பிடித்த தொழிலில் அசத்தும் பல் மருத்துவர்
Published on

ரு பக்கம் பல் மருத்துவராக மருத்துவப்பணி. மறுபக்கம் பரிசுப்பொருள் தயாரிப்பு தொழில் என மும்முரமாக செயல்பட்டு வருகிறார், சென்னை விம்கோ நகரைச் சேர்ந்த சுஷ்மிதா. இவர் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

"நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். நன்றாகப் படித்து இப்போது பல் மருத்துவராக பணியாற்றுகிறேன். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்தபோது, கல்விக்கான செலவுகள் அதிகரித்தது. என்னுடைய தேவைகளுக்காக குடும்பத்தினரை நெருக்கடி நிலைக்குத் தள்ளுவதை எனது மனம் விரும்பவில்லை. எனக்கான செலவுகளை, என் னால் முடிந்தவரை நானே பார்த்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்போதுதான் எனக்கு சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. உடனே தயங்காமல் எனக்கு மிகவும் பிடித்த பரிசுப்பொருள் தயாரிக்கும் தொழிலை தொடங்கினேன்.

நான் தொழிலை ஆரம்பித்த காலகட்டத்தில், எனக்கு குடும்பத்தினரின் ஆதரவு குறைவாகவே இருந்தது. ஆனாலும் தொடர்ந்து எனது தொழிலில் மும்முரமாக ஈடுபட்டேன். காலப்போக்கில் குடும்பத்தினர் மற்றும் எனது வருங்கால கணவரின் ஆதரவும் கிடைத்தது. அவர்களின் உதவியுடன் தொழிலை விரிவுபடுத்தினேன்.

எனது நிறுவனத்தின் மூலம், வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப அவர்களுடைய அன்புக்குரியவர்களின் பிறந்தநாள், திருமண நாள் போன்ற விசேஷ நாட்களுக்குப் பரிசுப்பொருட்களை தயாரித்துக் கொடுக்கிறேன்.

என்னைப்போல தொழில் தொடங்க விரும்பும் பெண்கள், முதலில் அந்த எண்ணத்தில் உறுதியாக இருக்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்தால், அந்த பணியில் இருந்து விலகி தொழிலில் இறங்க வேண்டாம். நீங்கள் செய்யப்போகும் தொழிலில் நிரந்தர வருமானமும், நல்ல எதிர்காலமும் இருந்தால் மட்டும், முழுமையாக அதில் ஈடுபடுவது நல்லது. ஏனெனில், ஒரு தொழிலை ஆரம்பித்த உடனேயே வெற்றி பெறுவது என்பது சாத்தியமற்றது. எனவே அதற்கு ஏற்றதுபோல தொழிலை படிப்படியாக உயர்த்துவது நல்லது.

தங்களுடைய திறமை எதுவோ, அதையே மூலமாக வைத்து தொழில் தொடங்க வேண்டும். மற்றவர்களைப் பார்த்து தொழில் தொடங்க நினைக்கக்கூடாது. தொழிலில் வரும் லாபத்தில் ஒரு பங்கை, அதை சந்தைப்படுத்துவதற்காக ஒதுக்க வேண்டும். தொழில் செய்பவர்கள் தன்னாலான உதவிகளை மற்றவர்களுக்கும் செய்ய வேண்டும்.

நான் பல் மருத்துவம் மூலம் என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். இருந்தாலும் முதியோர்களுக்கு பெருமளவு உதவிகளைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன். நிச்சயமாக அதையும் செய்து காட்டுவேன்" என நம்பிக்கையோடு கூறினார் சுஷ்மிதா.

'கஸ்டமைஸ்' பரிசுப் பொருட்கள் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!

பரிசு கொடுக்கும் நிகழ்வு, பரிசு பெறுபவரின் பாலினம், பரிசு பெறுபவரின் விருப்பம், பரிசு பெறுபவருடனான உங்களுடைய உறவு, நீங்கள் அளிக்கும் பரிசுக்கான அர்த்தம், பரிசுப் பொருளின் தரம், ஆயுள், தயாரிப்புக்கான காலம் மற்றும் விலை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு 'கஸ்டமைஸ்' (பரிசு பெறுபவரின் விருப்பத்தை அறிந்து) பரிசுப் பொருட்களை வாங்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com