மனையின் வெளிப்புற அழகை வடிவமைக்கும் கட்டிட கலைஞர்

மனையின் வெளிப்புற அழகை வடிவமைக்கும் கட்டிட கலைஞர்
Published on

'லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்டசர்' என்பது தோட்டங்கள் அல்லது இதர பொழுது போக்கு அம்சங்களை குடியிருப்புகளில் வடிவமைப்பது என்பதல்ல. கட்டிட ஆர்க்கிடெக்ட்டுகளின் பணியைப் போலவே, வெளிப்புற அமைப்பை அழகுபடுத்துவதில் லேன்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்ட்டின் பணியும் அவசியமான ஒன்று. பெரு நகரங்களில் செயல்பட்டு வரும் அவர்களது பணி பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கட்டிடக்கலையின் இன்னொரு அம்சமாக உள்ள லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்சர் பற்றி சில தகவல்களை இங்கே காணலாம்.

தற்போதைய அவசர யுகத்தில் பணிச்சுமை, பொருளாதார நெருக்கடி, உறவுகளிலிருந்து தள்ளி வாழ்தல் போன்ற பிரச்சினைகள் நகர வாழ்வில் சாதாரணமாகி வருகிறது. அதனால் வீடு என்பது வசிக்கும் இடம் என்பதை கடந்து, இனிய சூழலை உருவாக்கும் இடமாக இருப்பது அவசியம். வீட்டின் கட்டமைப்பு மூலம் மனதில் அமைதியை ஏற்படுத்த முடியும் என்று கட்டிடக்கலை வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அந்த வகையில் தனி வீடு அல்லது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றை வடிவமைப்பதில் 'லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்ட்' என்பவர் முக்கியமான பங்கு வகிக்கிறார்.

வீடுகளின் கட்டிட வடிவமைப்பைப் போல, திறந்த வெளியையும் அழகு மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில் வடிவமைப்பது லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்ட் வல்லுனரின் பணியாகும். தனி வீடுகள் உள்ளிட்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் சிறுவர்களுக்கான பார்க் மற்றும் பொதுப் பூங்காக்கள் போன்ற திறந்த வெளி இடத்தை அவர்கள் தக்க முறையில் வடிவமைக்கிறார்கள். வீடுகள், அடுக்கு மாடிகள், தங்கும் விடுதிகள், சமூக கட்டமைப்புகள் ஆகியவற்றில் உள்ள காலி இடத்தை வடிவமைப்பு செய்வதுடன், நகர வடிவமைப்பு திட்டத்திலும் அவர்களுக்கு முக்கிய இடமுண்டு.

கட்டிட வரைபட அளவிலேயே லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்டுகளை கலந்தாலோசித்து முடிவுகளை எடுத்தால் பல விஷயங்களை சிறப்பாக அமைக்க இயலும். குறிப்பிட்ட அறையிலிருந்து வீட்டின் வெளிப்புறத்தை பார்ப்பதற்கான வடிவமைப்பு, நடைபாதைக்குச் செல்லும் கதவுகள், கட்டிடத்தை அழகாக காட்டும் வெளிப்புற வடிவமைப்பு போன்றவற்றை முன்னதாகவே தீர்மானிப்பது பல சிக்கல்களை தவிர்க்கும். அதனால், புதிய வீடு கட்டுபவர்கள், லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்சர் குறித்த தகவல்களையும், இணைய தளங்களில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அளிக்கும் ஆலோசனைகளையும் பெற்று முடிவுகளை மேற்கொள்ளலாம்.

வீட்டுத் தோட்டம் அமைப்பது, காலி இடத்தை பசுமையான இடமாக மாற்றுவது மட்டுமல்லாமல், அப்பகுதிகளை எவ்வாறு பயன்படுத்தப் போகிறோம், எப்படி அழகு செய்கிறோம் என்பவற்றை மனதில் கொண்டு வடிவமைக்க வேண்டும். நீச்சல் குளம், விளையாடும் இடம், அமருமிடம், ஓய்விடம், நடை பாதைகள், பாறைகள், டைல்ஸ் பதித்தல், கருங்கற்கள் பதித்தல், சில கட்டுமானப் பணிகள், நீரூற்று மற்றும் லைட் செட்டிங் உள்ளிட்ட பணிகள், புல்வெளிகள், செடி கொடிகள், மரங்கள் போன்றவற்றையும் திட்டமிட்டு அமைக்க லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்சர் உதவி செய்கிறது.

மலைப்பாங்கான பகுதிகளில் அமைக்கப்படும் குடியிருப்புகளில் மண் சரிவைத் தடுக்கும் அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும். மழை நீர் சேகரிப்பு, மின்சார வசதிகளுக்கான கேபிள் பதிப்பு பணிகள், புல்தரை அமைப்பு, செடி, கொடிகளுக்கான நீர் பாசன வசதி, நீச்சல் குளம், நீருற்று, நீர்வீழ்ச்சி ஆகிய பணிகளுடன் மழை நீர், வெள்ள பாதிப்பு போன்றவை தடுக்கும் அமைப்புகளுடன் வடிகால் வசதியும் செய்வது அவசியம். குடியிருப்பு பகுதிகளில் எந்த வகையான செடிகள், மரங்கள் வளர்ப்பது, அவற்றின் தாவரவியல் பெயர், அதன் தன்மை, பூக்கும் காலம், எவ்வளவு நிழல் தரும் என்பது உள்ளிட்ட தகவல்களும் பதிவு செய்யப்படும்.

லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்சர் பற்றி வெகுஜன மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதற்குக் காரணம் வீடு கட்ட அதிக இடம் மற்றும் பட்ஜெட் கொண்டவர்களுக்கே இதுபோன்ற விஷயங்கள் அவசியம் என்று அவர்கள் நினைக்கக்கூடும். ஆனால், அவர்கள் சிறிய இடத்தை கூட கச்சிதமான பிளான் செய்து வாழ்க்கையை எளிமையாக்கி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். 500 சதுரடி இடமாக இருந்தாலும், 50 ஏக்கர் பூமியாக இருந்தாலும் லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்ட் உதவி கொண்டு பட்ஜெட்டுக்கேற்ப கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com