ஆண்டாள் சூடிய மாலை மதுரைக்கு அனுப்பிவைப்பு

நாளை, கள்ளழகர் வைகையில் இறங்கும் வைபவத்தையொட்டி ஆண்டாள் சூடிய மாலை மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆண்டாள் சூடிய மாலை மதுரைக்கு அனுப்பிவைப்பு
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது கருட சேவையன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்து அனுப்பிய மாலையை ஏழுமலையான் அணிந்துகொண்டு கருட வாகனத்தில் காட்சி அளிப்பார். அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டு மதுரை சித்திரை திருவிழாவின் போது, வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை 3 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது கள்ளழகருக்கு அணிவிக்கப்படும் மாலை ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது, ஆண்டாள் சூடிய மாலைக்கு பூஜைகள் நடைபெற்றன. அதன்பிறகு அந்த மாலை மற்றும் வஸ்திரம், கிளி, போன்றவை கூடையில் எடுத்து வைக்கப்பட்டு யானை முன்செல்ல மாட வீதிகள் வழியாக ஊர்வலம் நடைபெற்றது. மாலை 5 மணி அளவில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மதுரைக்கு வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மாலையை அணிந்து, நாளை (சனிக்கிழமை) காலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவார். மாலை அனுப்பும் நிகழ்ச்சியில் ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com