ஆரணி பகுதியில் மின்வெட்டு நிரந்தர தீர்வு கோரி பொதுமக்கள் மறியல்

ஆரணி பகுதியில் ஏற்படும் மின்வெட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
ஆரணி பகுதியில் மின்வெட்டு நிரந்தர தீர்வு கோரி பொதுமக்கள் மறியல்
Published on

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி பகுதிக்கு துரைநல்லூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. ஆரணியில் குறைந்த அழுத்த மின்சாரமே கிடைக்கிறது. அதனால் மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதடைகிறது.

இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அன்று இரவு புதுவாயல்-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் ஆரணி தோட்டக்கார தெருவில் உள்ள மின்வாரிய அலுவலகம் எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆரணி போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினமும் பலமுறை ஆரணி பகுதியில் மின்சாரம் தடைபட்ட வண்ணம் இருந்தது. இரவு 8 மணிக்கு நிரந்தரமாக மின்தடை ஏற்பட்டது. ஆரணியில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு பொதுமக்கள் சென்று பார்த்தபோது ஊழியர்கள் யாரும் இல்லை.

மீண்டும் மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஏற்கனவே மின்வெட்டுக்காக மறியலில் ஈடுபட்டிருந்த நிலையில் மீண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இரவு 11 மணிக்கு மின்வினியோகம் வழங்கப்பட்டது. இருப்பினும், பொதுமக்கள் மின்தடைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை தங்களது போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று சமரச பேச்சுவார்த்தைக்கு வந்த ஆரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதியிடம் உறுதியாக கூறினர்.

மறியல் போராட்டம் காரணமாக சாலையின் இருபுறமும் பல கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. இரவு 11 மணிக்கு கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன், ஆரணி மின்வாரிய செயற்பொறியாளர் செந்திவேலன் ஆகியோர் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பஞ்செட்டியில் உள்ள மின்வாரிய உதவி கோட்டபொறியாளரிடம் பேசி இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதாக உறுதி கூறினார். இதையடுத்து பொதுமக்கள் இரவு 12 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மறியல் போராட்டத்தின் காரணமாக அந்த பகுதியில் இரவு 8 மணி முதல் 12 மணி வரை 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com