பிரஷர் குக்கர் பயன்படுத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

பிரஷர் குக்கரில் சமைக்கும் போது, அதில் பாதி அல்லது முக்கால் பாகம் தான் சமைக்கும் உணவுப்பொருள் இருக்க வேண்டும். முழு கொள்ளளவு வரை இருக்குமாறு சமைக்கக் கூடாது.
பிரஷர் குக்கர் பயன்படுத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
Published on

வேலைக்குச் செல்லும் பெண்கள் முதல் வீட்டை நிர்வகித்து வரும் இல்லத்தரசிகள் வரை அனைவருக்கும் உதவியாக இருப்பது பிரஷர் குக்கர். பெண்களுக்கு பிரஷர் ஏறாமல், சமையலை எளிதாக முடிப்பதற்கு உதவும் பிரஷர் குக்கரை சரியான முறையில் பராமரிக்க வேண்டியது முக்கியம்.

பிரஷர் குக்கரில் உணவு சமைக்கும்போது 90 முதல் 95 சதவிகித ஊட்டச்சத்துக்கள் வீணாகாமல் கிடைப்பதாக இத்தாலியின் ஜேர்னல் ஆப் புட் சயின்ஸ்' எனும் நிறுவனம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

பிரஷர் குக்கரின் வகைகள்:

அலுமினியம், காப்பர், எஸ்.எஸ்.ஸ்டீல், டைட்டானியம் என பல வகையான உலோகங்களில் பிரஷர் குக்கர்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் அலுமினியத்தால் தயாரிக்கப்பட்ட பிரஷர் குக்கரை உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது.

பிரஷர் குக்கரை பராமரிக்கும் முறைகள்:

பிரஷர் குக்கரில் பயன்படுத்தும் கேஸ்கட் எனும் ரப்பர் வளையத்தை, உபயோகப்படுத்தாதபோது குக்கரில் இருந்து கழற்றி, குளிர் சாதனப் பெட்டியின் பிரீஸரில் வைக்கலாம். இந்த வசதி இல்லாதவர்கள் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் கேஸ்கட்டைப் போட்டு வைக்கலாம். இதன் மூலம் கேஸ்கட்' விரைவாக சேதம் அடைவதைத் தடுக்க முடியும்.ஆறு மாதம் அல்லது வருடத்திற்கு ஒரு முறை கேஸ்கட்டை அவசியம் மாற்ற வேண்டும்.

பிரஷர் குக்கரின் மூடியில் இருக்கும் துவாரங்களில் ஏற்படும் அடைப்பை, சிறிய ஊசியின் உதவியால் நீக்கி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

சமையல் முடிந்த பின்பு, குக்கரில் சமைத்த உணவை வேறு பாத்திரத்தில் மாற்றி விட்டு சுத்தமாக கழுவி உலர வைக்க வேண்டும். வெயிலில் 10 நிமிடம் வரை உலர வைப்பது சிறந்தது.

பிரஷர் குக்கரில் சமைக்கும் போது, அதில் பாதி அல்லது முக்கால் பாகம் தான் சமைக்கும் உணவுப்பொருள் இருக்க வேண்டும். முழு கொள்ளளவு வரை இருக்குமாறு சமைக்கக் கூடாது. குக்கரை மூடும் போதே விசில் போடக்கூடாது. நீராவி நன்றாக வெளிவர ஆரம்பித்த பிறகே அதில் விசிலைப் பொருத்த வேண்டும். இதன் மூலம் குக்கர் சீராக இயங்குவதோடு நீண்ட நாள் உழைக்கும்.

பிரஷர் குக்கரில் நேரடியாக சமைப்பதைத் தவிர்த்து, உள்ளே ஒரு எவர் சில்வர் பாத்திரத்தை வைத்து உணவு சமைப்பதே நல்லது.

சமைத்து முடித்ததும் குக்கரின் அழுத்தம் முற்றிலும் அடங்கிய பின்னர் தான் திறக்க வேண்டும். பிரஷர் குக்கரில் இருக்கும் கைப்பிடிகளில் உள்ள திருகுகள் துருபிடிக்காமல் இருப்பதற்கு அதனை மாதம் ஒரு முறை கழற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

திருகுகள் கழன்று வராமல் சரியாகப் பொருந்தி இருக்கிறதா என்பதையும் அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ள வேண்டும். பிரஷர் குக்கரை அதன் காலாவதி தேதிக்கு பின்னரும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு பயன்படுத்தினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com