காஷ்மீரில் ராணுவம் அதிரடி தாக்குதல்: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் பலியாகினர்.
காஷ்மீரில் ராணுவம் அதிரடி தாக்குதல்: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் கடந்த 13-ந்தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு போலீஸ் அதிகாரிகள் 2 பேர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் ஒரு அதிகாரி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு அதிகாரி படுகாயம் அடைந்தார். மேலும் அந்த பயங்கரவாதிகள் போலீஸ் அதிகாரிகளின் துப்பாக்கிகளையும் பறித்து சென்றனர்.

இதையடுத்து, அங்கு கூடுதல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு தப்பி ஓடிய பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது.

இந்த நிலையில் கிஷ்துவார் மாவட்டத்தின் தாச்சான் நகரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து ராணுவத்தினர், சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் போலீசார் அடங்கிய சிறப்புக் குழு அங்கு விரைந்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியது.

ராணுவத்தினர் குறிப்பிட்ட பகுதியை நெருங்கியபோது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் தானியங்கி துப்பாக்கி மூலம் சுடத் தொடங்கினர். இதையடுத்து ராணுவத்தினர் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

இதில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட னர். சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

சுட்டுக்கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளும் ஹிஸ்புல் முஜாஹதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள்தான் போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன்று துப்பாக்கிகளை பறித்து சென்றவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே காஷ்மீரின் சோபியான் மாவட்டத்திலும் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலின் பேரில் ராணுவத்தினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்து வரும் நிலையில், எல்லைப்பகுதியில் கட்டுப்பாட்டு கோடு அருகே தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

அங்குள்ள பூஞ்ச் மாவட்டத்தின் கஸ்பா மற்றும் கிர்னி பகுதியில் உள்ள அருகே நேற்று பகல் 11 மணியளவில் பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிகள் மற்றும் சிறிய ரக பீரங்கிகள் மூலம் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்திய ராணுவத்தினர் அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com