

திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி தட்டான்குட்டை பகுதியில் உள்ள தொரவலூர் சாலை, அத்திக்காடு சாலை, ஜே.நகர், வெள்ளியம்புதூர், ஏ.டி.காலனி ஆகிய பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி பொதுமக்களுக்கு 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த வாரம் சொக்கனூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமார் வந்துவிட்டு மீண்டும் திருப்பூருக்கு திரும்பி சென்றபோது, தட்டான்குட்டை பகுதி கிராமமக்கள் விஜயகுமார் எம்.எல்.ஏ.வின் காரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் சீரான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது ஆழ்குழாய் கிணற்று தண்ணீரையும், குடிநீரையும் விரைவில் சீராக வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். ஆனால் ஒருவாரத்திற்கு மேல் ஆகியும் கிராம மக்களுக்கு குடிநீர் சரிவர கிடைக்கவில்லை. இது தொடர்பாக அதிகாரிகள் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், நேற்று திருப்பூர் வட்டார வளர்ச்சி அதிகாரி பிரபாகரன் மற்றும் திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமார் ஆகியோர் திருப்பூர் வடக்கு ஒன்றிய பகுதிக்கு மழைநீர் வடிகால் மற்றும் குடிநீர் பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய வந்திருந்தனர். பெருமாநல்லூர் அருகே தட்டான்குட்டை பஸ் நிறுத்தம் அருகே வந்த எம்.எல்.ஏ. விஜயகுமாரை பொதுமக்கள் திடீரென்று முற்றுகையிட்டனர்.
அப்போது 20 நாட்களாக ஆழ்குழாய் கிணற்று தண்ணீரும், குடிநீரும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும், சீரான குடிநீர் கிடைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஒருவாரத்தில் சீரான குடிநீரை வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. உறுதி அளித்ததை தொடர்ந்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.