கட்டிட பணியாளர்களுக்கு உதவும் தொழிலாளர் நல வாரியம்

கட்டிட தொழிலாளர்களின் நலனுக்காக 1994-ம் ஆண்டு தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் ஏற்படுத்தப்பட்டது.
கட்டிட பணியாளர்களுக்கு உதவும் தொழிலாளர் நல வாரியம்
Published on

கொத்தனார், கல் உடைப்பவர், தச்சர், பெயிண்டர், கம்பி வளைப்பவர், எலக்ட்ரிஷியன், கூலியாள், கிணற்றில் தூர் எடுப்பவர், சம்மட்டி ஆள், கூரை வேய்பவர், தச்சு பணியாளர், மொசைக் பாலீஸ் செய்பவர், கட்டிட பணிகளில் மண் வேலை செய்பவர் உள்ளிட்ட வெவ்வேறு பணிகளை செய்பவர்கள் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அதன் மூலம், ஓய்வூதியம், விபத்து உதவி நிதி, வீடு கட்ட கடன், கல்வி உதவி தொகை, காப்பீடு பிரீமியம், மருத்துவ செலவு, பேறுகால சலுகை போன்றவற்றை பெற இயலும்.

வாரியத்தின் நலத்திட்ட உதவிகள் மூலம் பதிவு பெற்ற தொழிலாளியின்வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது. அவர்களது குழந்தைகளுக்கு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை கல்வி வழங்கவும் ஆவண செய்யப்பட்டுள்ளது.

முந்தைய வருடத்தில் குறைந்தபட்சம் 90 நாட்கள் பணி புரிந்த 18 முதல் 60 வயது வரை உள்ள தொழிலாளர்கள், கட்டுமான நல வாரியத்தில் பதிவு செய்து, அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம்.

கட்டுமான பணியிடத்தில் 10 தொழிலாளர்களுக்கும் மேலாக பணி புரிவது அல்லது கட்டிடத்தின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக இருப்பது ஆகிய நிலைகளில் கட்டிட தொழிலாளர் நல வரி நிதிக்காக (செஸ்) கட்டிட மதிப்பில் 1 முதல் 2 சதவிகிதம் வரை மாநில அரசுகள் வரி விதிக்கலாம். இந்த நிதி மூலம் கட்டிட தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு கிடைக்கிறது.

பதிவு செய்ய விரும்புபவர்கள் விண்ணப்ப படிவத்தில் சம்மந்தப்பட்ட தொழிலில் ஈடுபட்டுள்ளவர் என்பதற்கான சான்றை, பதிவு பெற்ற ஒப்பந்ததாரர், கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் அரசு அமைப்புகள் அல்லது நிறுவனங்கள், பதிவு பெற்ற தொழிற்சங்கம், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடம் பெற வேண்டும். சென்னை மாவட்டத்தை சேர்ந்த பணியாளர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கான வருவாய் ஆய்வாளரிடம் சான்று பெறலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தமது புகைப்படத்தை ஒட்டி, மற்றொரு புகைப்படத்தை உறையில் வைத்து தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் நேரில் அளித்து ஒப்புதல் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு பதிவு கட்டணம் ஏதும் இல்லை.

பதிவு செய்த பின்னர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அதை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அதற்கும் கட்டணம் எதுவும் இல்லை. 60 வயது முடிந்தவர்கள் புதுப்பிக்க இயலாது. உறுப்பினரால் அளிக்கப்படும் புதுப்பித்தல் விண்ணப்பம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் பெறப்பட்டு, உரிய சரிபார்ப்புக்கு பின்னர் புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டை உறுப்பினருக்கு திரும்ப அளிக்கப்படும்.

எதிர்பாராமல் அடையாள அட்டை தொலைந்து விட்டால், தொழிலாளரின் விண்ணப்பத்தின் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தொழிலாளர் உதவி ஆணையரால் இரண்டாம்படி என்ற டூப்ளிகேட் அடையாள அட்டை தக்க கட்டணம் பெற்றுக்கொண்டு வழங்கப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com