காரடையான் நோன்பு.. விரதம் இருக்கும் முறை

காரடையான் நோன்பு இருக்கும் பெண்கள் அரிசி மாவு, காராமணி சேர்த்து காரடை செய்து, நைவேத்தியமாக அம்மனுக்கு படைக்கலாம்.
காரடையான் நோன்பு வழிபாடு
காரடையான் நோன்பு வழிபாடு
Published on

மாசி மாதம் முடியும் நேரமும், பங்குனி மாதம் பிறக்கும் தருணமும் கூடும் நேரத்தில் கடைப்பிடிக்கப்படும் விரதம், 'காரடையான் நோன்பு' ஆகும். இந்த விரதத்தை 'சாவித்திரி விரதம்' என்றும், ‘காமாட்சி விரதம்' என்றும் அழைக்கிறார்கள். திருமணமான பெண்கள், தங்கள் மாங்கல்ய பலத்தை பெருக்குவதற்காக இந்த விரதத்தை கடைப்பிடிக்கிறார்கள்.

சத்தியவான் சாவித்திரி கதை

சாளுவ தேசத்தை ஆட்சி செய்த துயமத்சேனன் என்ற மன்னனுக்கு சத்தியவான் என்ற மகன் இருந்தான். சிறப்பாக ஆட்சி செய்த மன்னன், வயது முதிர்வு காரணமாக கண் பார்வையை இழந்தான். இதைப் பயன்படுத்திக் கொண்ட எதிரிகள், மன்னனிடம் இருந்து நாட்டை கைப்பற்றினர். இதையடுத்து, சத்தியவானுக்கு தன் பெற்றோருடன் காட்டில் வசிக்கும் நிலை ஏற்பட்டது.

ஒரு முறை அஸ்வபதி என்ற மன்னனின் மகள் சாவித்திரி, காட்டிற்கு சென்றபோது, சத்தியவான் தன் பெற்றோருக்கு பணிவிடை செய்துகொண்டிருப்பதைப் பார்த்து சத்தியவானை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதுப்பற்றி தன் தந்தையிடம் சாவித்திரி கூறினாள். மன்னன், நாரதர் மூலமாக “சத்தியவான் ஒரு இளவரசன். ஆனால், குறைந்த ஆயுள் கொண்டவன்” என்பதை அறிந்தான்.

இதனால் வருத்தம் அடைந்த மன்னன், சத்தியவானுக்கு தன் மகளை திருமணம் செய்துகொடுக்க தயங்கினான். ஆனால் சாவித்திரி, சத்தியவானை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தாள். மன்னன் வேறு வழியில்லாமல், சத்தியவானுக்கே சாவித்திரியை திருமணம் செய்து கொடுத்தான். இதையடுத்து, சத்தியவானும், சாவித்திரியும் காட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.

எமதர்மரை பின்தொடர்ந்த சாவித்திரி

சத்தியவானுக்கு குறைந்த ஆயுள் என்பதை அறிந்த சாவித்திரி, நாரதரின் அறிவுரைபடி சில விரதங்களை மேற்கொண்டு வந்தாள். ஒரு வருடம் முடிந்த நிலையில், ஒரு நாள் சாவித்திரியின் மடியில் படுத்திருந்த நிலையிலேயே சத்தியவானின் உயிர் பிரிந்தது. அப்போது சத்தியவான் உயிரை எடுத்துச்செல்ல வந்த எமதர்மர், கற்புக்கரசியான சாவித்திரியின் கண்ணுக்கு தென்பட்டார்.

சத்தியவானின் உயிரை கவர்ந்துச் சென்ற எமதர்மரை பின் தொடர்ந்தாள், சாவித்திரி. இதைப் பார்த்த எமதர்மர், "எதற்காக என்னை பின்தொடர்கிறாய்” என்று கேட்டார். ஆனால் சாவித்திரி எந்த பதிலும் சொல்லாமல் எமதர்மரை பின்தொடர்ந்தார். உடனே எமதர்மர், "உன் கணவன் உயிரை திருப்பி கொடுக்கவே, பின்தொடர்கிறாய் என்பதை அறிவேன். ஆனால், பிரிந்த உயிர் திரும்புவது என்பது முடியாத காரியம். எனவே வேறு ஏதாவது வரம் கேள்" என்றார்.

எமதர்மர் அளித்த வரம்

எமதர்மர் கேட்டதும் சாதுர்யமாக, "எனக்கு பிறக்கும் நூறு குழந்தைகளை, நான் மடியில் வைத்து கொஞ்சுவதை, என் மாமனார் கண்குளிர காண வேண்டும்” என்று கேட்டாள். உடனே சற்றும் யோசிக்காமல் “அப்படியே ஆகட்டும்” என்று வரம் அளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். எமதர்மரை தடுத்த சாவித்திரி, "தாங்கள் கொடுத்த வரத்தின்படி, என்னுடைய கணவன் உயிரை திருப்பி தாருங்கள்" என்று கேட்டார்.

அதன்பின்பு தான், எப்பேர்பட்ட வரத்தை அளித்தேன் என்பதை எமதர்மர் உணர்ந்தார். கொடுத்த வரத்தை மீற முடியாது என்பதால் சத்தியவானின் உயிரை திருப்பி கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார், எமதர்மர்.

சாவித்திரியின் வரத்தின்படி, சத்தியவான் உயிர் பெற்றதோடு, சாவித்திரியின் மாமனாருக்கும் கண் பார்வை கிடைத்தது. இதையடுத்து இழந்த ராஜ்ஜியத்தை மீட்டனர். சத்தியவானும், சாவித்திரியும் பல்லாண்டு காலம் மகிழ்ச்சி யாக வாழ்ந்தனர்.

Also Read
பார்வதிதேவி கடைப்பிடித்த விரதம்
காரடையான் நோன்பு வழிபாடு

நோன்பின் மகிமை

சத்தியவானின் உயிரை மீட்பதற்கு உதவியாக இருந்தது, அவள் கடைப்பிடித்து வந்த 'காரடையான் நோன்பு'. இதனால் தான் இது 'சாவித்திரி நோன்பு' என்றும் அழைக்கப்படுகிறது. காமாட்சி அம்மனும் இந்த விரதத்தை கடைப்பிடித்த காரணத்தால் 'காமாட்சி விரதம்' என்றும் பெயர் பெற்றது.

விரதம் இருக்கும் முறை

காரடையான் நோன்பு இருக்கும் பெண்கள், அதிகாலையில் எழுந்து குளித்து, வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். பின்பு, பூஜை அறையில் கோலம் இட்டு, அம்மன் படம் வைத்து விளக்கேற்ற வேண்டும். கோலத்தின் மீது கும்பம் ஒன்றை வைத்து, அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு பூ சூடவேண்டும். ஒரு நூலில் மஞ்சள் தடவி நோன்பு கயிறு தயார் செய்து, அதை கும்பத்தின் மீது கட்ட வேண்டும்.

அரிசி மாவு, காராமணி சேர்த்து காரடை செய்து, நைவேத்தியமாக படைக்கலாம். அம்மனுக்குரிய பாடல்களை பாடி வழிபட வேண்டும். பின்பு, கணவன் கையால் நோன்பு கயிற்றை கழுத்திலோ, கையிலோ கட்டிக் கொள்ளலாம். இந்த விரதத்தை மேற்கொண்டால் கணவரின் ஆயுள் அதிகரிக்கும், திருமணமாகாத பெண்களுக்கு நல்ல கணவன் அமைவார், குடும்பம் மகிழ்ச்சியோடு நடைபெறும் என்பது நம்பிக்கை.

Also Read
கந்தனின் அருள் பெற கார்த்திகை விரதம்
காரடையான் நோன்பு வழிபாடு

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com