24 ஏகாதசி விரதம் இருந்த பலனை தரும் நிர்ஜல ஏகாதசி

பாண்டவர்களில் ஒருவரான பீமன் கடைப்பிடித்த விரதம் நிர்ஜல ஏகாதசி விரதம் ஆகும்.
24 ஏகாதசி விரதம் இருந்த பலனை தரும் நிர்ஜல ஏகாதசி
Published on

பகவான் மகா விஷ்ணுவை வழிபட்டு அவரது அருளை பெறுவதற்கான விரதம் ஏகாதசி விரதம் ஆகும். ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை ஏகாதசி தினம் வரும். ஏகாதசி நாளில் விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் பகவான் அருள்வார் எனது ஐதீகம். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு உள்ளது. அந்த வகையில் நாளை வரக்கூடிய ஏகாதசியானது நிர்ஜல ஏகாதசி என அழைக்கப்படுகிறது.

இந்த விரதம் ஏகாதசி விரதங்களில் மிக முக்கியமானதாகும். இந்த விரதத்தை கடைபிடித்தால், ஒரு வருடம் முழுவதும் அதாவது 24 ஏகாதசி விரதங்களையும் கடைபிடித்த பலனை தரும் என புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து ஏகாதசி நாட்களிலும் விரதம் இருக்க முடியாத பக்தர்கள் நிர்ஜல ஏகாதசி நாளில் விரதம் இருப்பது வழக்கம்.

இந்த ஏகாதசியின் மற்றொரு முக்கியத்துவம் என்னவென்றால், பெருமாளை வேண்டி விரதம் இருக்கும் பக்தர்கள் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் கடுமையான விரதத்தை மேற்கொள்கின்றனர். அதனால்தான் இந்த விரதம் மிகவும் கடினமானதாகக் கருதப்படுகிறது. நிர்ஜலா என்றால் தண்ணீர் இல்லாமல் என்று பெருள்.

ஏகாதசி திதியானது இன்று (ஜூன் 6ம் தேதி) அதிகாலை 04.53 மணிக்கு துவங்கி, நாளை (ஜூன் 7) காலை 06.45 வரை உள்ளது. அதற்கு பிறகு துவாதசி துவங்குகிறது. எனவே, பெரும்பாலான பக்தர்கள் இன்று விரதம் இருக்கிறார்கள். வைஷ்ணவ நாட்காட்டியின்படி விரதம் இருக்கும் பக்தர்கள் நாளை விரதம் இருப்பார்கள்.

ஏகாதசி விரதம் குறித்து அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) தொடர்ந்து பக்தர்களுக்கு அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. வைஷ்ணவ நாட்காட்டியின்படி விரதம் இருக்கும் நாள் மற்றும் விரதத்தை நிறைவு செய்யும் நேரம் குறித்து பக்தர்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. அவ்வகையில் நாளை (ஜூன் 7) சனிக்கிழமை முழுவதும் நிர்ஜல ஏகாதசி விரதம் கடைபிடிக்க வேண்டும், மறுநாள் (ஜூன் 8) ஞாயிறு காலை 6.10 மணி முதல் 7.10 மணிக்குள் விரதம் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்ஜலா ஏகாதசியானது பீமன் கடைப்பிடித்த விரதம் ஆகும். புராணத்தின் படி, பாண்டவர்களில் ஒருவரான பீமன், ஒருமுறை அனைத்து ஏகாதசி விரதங்களையும் கடைபிடிக்கத் தீர்மானித்தார். ஆனால் அவரால் தனது பசியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் வியாச முனிவரிடம் சென்று இதுபற்றி கேட்டார். அவர் நிர்ஜலா ஏகாதசி விரதம் இருக்கும்படி அறிவுறுத்தினார். இது ஒரு வருடத்தில் உள்ள அனைத்து ஏகாதசி (24 ஏகாதசி) விரத பலன்களையும் வழங்குகிறது. இத்தனை சிறப்புக்குரிய விரதத்தை பீமன் கடைப்பிடித்து பகவானின் அருளைப் பெற்றதால் இந்த நாள் பீம ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com