

பெருமாளை நினைத்து அனுஷ்டிக்கப்படும் உன்னதமான விரத நாள் ஏகாதசி ஆகும். பொதுவாக ஏகாதசியன்று விரதம் இருந்து பகவானை வழிபட்டால் பிறவித்துயர் நீங்கி, வைகுண்ட பதவியை அடைவார்கள் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு ஏகாசியும் ஒவ்வொரு சிறப்புடையது, ஒவ்வொரு விதமான நன்மையை அளிக்கக்கூடியது.
அவ்வகையில் திருக்கணித பஞ்சாங்கப்படி சைத்ர மாதத்தின் தேய்பிறை ஏகாதசி பாபமோசனி ஏகாதசி என அழைக்கப்படுகிறது. பாவங்களை நீக்குவதற்கான, பாவங்களை களைவதற்கான, பாவங்களை விலக்குவதற்கான அற்புதமான விரத நாள் ஆகும். வாழ்க்கையில் அறிந்தோ அறியாமலோ செய்யக்கூடிய பாவங்களை போக்கக்கூடியது.
பாவமோசனி ஏகாதசியின் சிறப்பு குறித்து பவிஷ்ய உத்தர புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. லோமஷ முனிவர், மந்ததா பேரரசருக்கு இந்த விரத மகிமையை விளக்கி கூறியிருக்கிறார். இதை பகவான் கிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவுக்கு தெரிவித்தார். அதன் விவரம்:
ஒரு காலத்தில் குபேரன் பூலோகத்தில் ஒரு அழகிய நந்தவனம் வைத்திருந்தார். நறுமண மலர்கள் பூத்துக்குலுங்கும் தோட்டங்கள், இன்சுவை கனிகள் வழங்கக்கூடிய மரங்கள், ஏரி, குளம் என அனைத்தும் நிறைந்த அந்த நந்தவனத்திற்கு குபேரன் அடிக்கடி வந்து தங்குவது வழக்கம். இதேபோல் தேவர்கள், கந்தர்வர்கள், தேவகன்னியர்கள் (அப்சரஸ்கள்) என பலரும் வந்து செல்வார்கள்.
இந்த நந்தவனத்தில் மேதவி என்ற முனிவர் தவம் செய்து வந்தார். சியவன முனிவரின் மகனான இவர், சிவபெருமானின் தீவிர பக்தர். எப்போதும் சிவசிந்தனையிலேயே இருந்த அவர், சிவபெருமானை நினைத்து தியானத்தில் இருக்கிறார்.
ஒருமுறை இந்த நந்தவனத்திற்கு வந்த அழகு தேவதைகளான தேவகன்னியர்கள், மேதவி முனிவரை வசீகரிக்க முயன்றனர். ஆனால் அவர்களின் அழகில் முனிவர் மயங்கவில்லை. அவரது தவ வலிமையை தேவகன்னியர்கள் உணர்ந்து பின்வாங்கினர். மஞ்சுகோஷ் என்ற தேவகன்னி மட்டும் முனிவரின் பக்தியை கலைத்து அவரை அடைய விரும்புகிறார். இதனால் சற்று தொலைவில் குடில் அமைத்து தங்கினார்.
அப்போதும் அவரை கண்டுகொள்ளாமல் மேதவி முனிவர் வழக்கமான தன் கடமைகளை செய்து வந்தார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு நாள் அந்த மங்கையின் அழகினால் கவரப்பட்டார். ஒரு கட்டத்தில் அவரது அழகில் தனது மனதை பறிகொடுத்தார். பக்தி வாழ்க்கையில் இருந்து விலகிய மேதவி முனிவர், தன்னுடைய நிலையை மறந்து காம சுகத்தினால் கவரப்பட்டு, அந்த தேவகன்னியுடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார்.
வருடங்கள் உருண்டோடின. 57 ஆண்டுகள் ஆகியும் மேதவி முனிவர் தனது குடும்ப வாழ்வில் இருந்து விடுபடாமல் காம சுகத்தில் கட்டுண்டு கிடக்கிறார். ஒரு கட்டத்தில் முனிவரின் நிலையைக் கண்டு அந்த பெண்ணே கவலைப்படுகிறார். முனிவரை விட்டு பிரிந்து தேவலோகம் செல்ல முடிவு செய்கிறார்.
இதை நேராக முனிவரிடம் கூறினார். “நான் தேவகன்னிகை. இங்கு வந்து நீண்ட நாள் ஆகிறது. என்னுடைய வீட்டுக்கு செல்ல வேண்டும்” என்று கூறுகிறார்.
இதனால் தன்னிலை உணர்ந்த மேதவி, தனது செயலுக்காக வருந்தினார். எவ்வளவு பெரிய வலையில் மாட்டிக்கொண்டேன், அற்ப ஆசைகளுக்காக இவ்வாறு பக்தியில் இருந்து விலகிவிட்டேனே... என்று கலங்கிய அவரது கோபப் பார்வை மஞ்சுகோஷ் மீது விழுந்தது. “என் தவத்தின் அனைத்து கடின உழைப்பு விளைவுகளையும் சாம்பலாக்கிவிட்டாய்” என்று ஆத்திரம் கொண்டார்.
முனிவரின் கோபத்தை பார்த்து பயந்துபோன தேவகன்னிகை, முனிவரை சாந்தப்படுத்த முயன்றார். எனினும், கோபம் தணியாத அவர், தேவகன்னிகைப் பார்த்து, “என் தவ வாழ்க்கையில் இருந்து என்னை பிரித்ததால் நீ மாயாவியாக, பூதமாக, பிசாசாக போவாய்” என்று கடும் சாபமிட்டார்.
தன்னுடைய தவறை மன்னித்து சாப விமோசனம் வழங்கும்படி கேட்டார் தேவகன்னிகை. “நான் என்னதான் தவறு செய்திருந்தாலும், இத்தனை காலம் உங்களுக்கு என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன். எனக்கு சாப விமோசனம் கொடுத்து பழைய நிலைக்கு நான் திரும்ப வழி செய்யுங்கள்” என்று பணிந்தார்.
இதனால் சாந்தமடைந்த முனிவர், “வரக்கூடிய ஏகாதசியானது பாவமோசனி ஏகாதசி. இந்த நாளில் விரதத்தை கடைப்பிடித்து பகவானை வழிபட்டால் எத்தகைய பாவத்தில் இருந்தும் விடுபடலாம்” என்றார்.
அதன்படி ஏகாதசி விரதத்தை முறைப்படி கடைப்பிடித்த தேவகன்னிகை மஞ்சுகோஷ், பகவானை நினைத்து வழிபட்டார். மறுநாள் விரதத்தை நிறைவு செய்தார். இதன்மூலம் சாபத்தில் இருந்து விடுபட்ட மஞ்சுகோஷ், முனிவரிடம் வந்து மன்னிப்பு கேட்டு தேவலோகத்திற்கு திரும்பிச் சென்றார்.
அதேசமயம், முனிவர் மேதவி, தன் தந்தை சியவன முனிவரை சந்தித்து நடந்த சம்பவத்தை கூறி தனது பாவத்தை போக்கும் வழிமுறையை கேட்டார். அவருக்கு அறிவுரை கூறிய சியவன முனிவர், “நீ செய்த பாவத்தை உணர்ந்ததாலும், ஏகாதசிக்கு சிறந்த புகழை தேடிக்கொடுத்ததாலும் உன்னுடைய பாவமும் படிப்படியாக விலகும்” என்றார்.
இதையடுத்து தவ வாழ்க்கையை தொடர்ந்த மேதவி முனிவர், ஏகாதசி விரதம் அனுஷ்டித்ததுடன், பகவானின் அனுக்ரகம் மற்றும் சிவபெருமானின் அருளை பெற்று பகவானின் இருப்பிடத்தை அடைந்தார்.
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அது பக்தி வாழ்க்கையாக இருந்தாலும் சரி பௌதிக வாழ்க்கையாக இருந்தாலும் சரி, வழிதவறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதில் இருந்து மீள்வதற்கு பக்திநெறி ஒன்றே வழியாகும்.
“இறப்பிற்கு முன்பாவது, தன் உடலை விடுவதற்கு முன்பாவது நம்முடைய காமம், குரோதம், லோபம், அற்ப ஆசைகள், கோபதாபங்கள் மற்றும் பேராசைகளில் இருந்து விடுபடுவது முக்கியமானது” என்று பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறியிருக்கிறார்.
எனவே, பக்தர்கள் மிகவும் எச்சரிக்கையுடனும் கட்டுப்பாட்டுடனும் இருக்கவேண்டும். இந்த கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ள கிருஷ்ண பக்தி முக்கியமானது. ஏகாதசி விரதமானது உடல் சுத்தம், மன சுத்தம் மற்றும் மன வலிமையை கொடுக்கக்கூடியது.