சிம்மம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
8.10.2023 முதல் 25.4.2025 வரை
சிம்ம ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், அக்டோபர் 8-ந் தேதி முதல் 8-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அதே நேரம் கேது பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு வருகிறார். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் இந்த இடங்களில் இருந்தபடியே, குறிப்பிட்ட நட்சத்திர பாதசாரங்களில் வலம் வந்தபடி ராகுவும், கேதுவும் பலன் தரப் போகிறார்கள். அஷ்டமத்து ராகு அலைச்சலைக் கொடுக்குமே தவிர, ஆதாயம் குறைவாகவே இருக்கும்.
ராகு பகவான் வரப்போவது 8-ம் இடம் என்பதால், உங்களுக்குள் ஒரு பய உணர்வு ஏற்படலாம். ஆனால் 'மறைந்த ராகு நிறைந்த தனலாபம் தரும்' என்பது ஜோதிட மொழி. எனவே பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படாது. ஆனால் வருவாய் வருவதற்கு முன்பாகவே, செலவுகள் வரிசை கட்டி காத்துக் கொண்டிருக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் மாற்றங்களைச் சந்திப்பீர்கள்.
2-ல் கேது சஞ்சரிப்பதால் தேவைக்கேற்ப பணம் வந்து கொண்டேயிருக்கும். என்றாலும் மன நிம்மதி குறையும். குடும்ப விஷயங்களை மூன்றாம் நபரிடம் பகிர வேண்டாம். ஊா் மாற்றம், வாகன மாற்றம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட தூரப் பணி மாற்றம் வந்துசேரும். பதவி உயர்வை முன்னிட்டு, ஒரு சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று பணிபுரிய நேரிடும்.
குரு மற்றும் சனி வக்ர காலம்
8.10.2023 முதல் 20.12.2023 வரை மேஷ ராசியிலும், 25.9.2024 முதல் 24.10.2023 வரை ரிஷப ராசியிலும் குரு வக்ரம் பெறுகிறார். அவர் வக்ர இயக்கத்தில் இருக்கும்பொழுது நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். நிலம், வீடுகளை விற்கும் சூழல் உருவாகும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கைநழுவிச் செல்லும்.
8.10.2023 முதல் 24.10.2023 வரை மகர ராசியிலும், 10.7.2024 முதல் 5.11.2024 வரை கும்ப ராசியிலும் சனி வக்ரம் பெறுகிறார். இவரது வக்ர காலத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படலாம். கோபத்தைக் குறைப்பதன் மூலம், விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.
சனிப்பெயர்ச்சி காலம்
20.12.2023 அன்று கும்ப ராசிக்கு சனி பகவான் செல்கிறார். இக்காலத்தில் உங்களுக்கு கண்டகச் சனியின் ஆதிக்கம் ஏற்படுகிறது. எனவே தடைகளும், தாமதங்களும் தானாகவே வந்து சேரும். கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவு கூடும். வீண் விரயங்களில் இருந்து விடுபட சுபவிரயங்களை மேற்கொள்ளுங்கள். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
குருப்பெயர்ச்சி காலம்
1.5.2024 அன்று ரிஷப ராசிக்கு குரு செல்கிறார். அங்கிருந்து உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். அந்த இடங்களுக்கு ஏற்ற வகையில் பல நல்ல மாற்றங்கள் வந்து சேரும். வளர்ச்சி கூடும். வருமானம் திருப்தி தரும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும்.
பெண்களுக்கான பலன்கள்
ராகு-கேது பெயர்ச்சியால் மனக்கலக்கம் அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகளால் பிரச்சினை வரலாம். ஆதாயம் குறைவாகவும், அலைச்சல் கூடுதலாகவும் இருக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்காதீர்கள். உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் வந்துசேரும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
8-ம் இடத்து ராகுவால் இனிய பலன் கிடைக்கவும், 2-ம் இடத்து கேதுவால் வருமானம் திருப்திகரமாக அமையவும், இல்லத்து பூஜையறையில் லட்சுமியை வைத்து வழிபட்டு வாருங்கள்.