

மேஷ ராசி நேயர்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சியின் மூலம் ஏழரைச் சனியின் முதல் கட்டமான விரயச் சனி தொடங்குகிறது. உங்கள் ராசிக்கு 10 மற்றும் 11-ம் இடங்களுக்கு அதிபதியான சனி பகவான், இப்போது 12-ம் இடமான அயன, சயன மோட்ச ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், இது ஒரு மாறுதலான பலன்களைத் தரும் காலமாகும். விரயச் சனி என்பது செலவுகளைக் குறிக்கும் என்றாலும், சனி பகவான் உங்கள் ராசிக்குத் தொழில் மற்றும் லாபத்திற்கு அதிபதியாக இருப்பதால், இந்தச் செலவுகள் அனைத்தும் சுப விரயங்களாக, ஆதாயம் அளிப்பவையாக அமையும்.
நீண்ட நாட்களாக வெளிநாடு செல்ல முயற்சி செய்தவர்களுக்கு இப்போது விசா மற்றும் பயண வாய்ப்புகள் எளிதாகக் கைகூடும். பொதுவாக, உங்கள் ராசியில் சனி பகவான் நீசம் பெறுவார் என்பதால், விரயத்தில் அவர் சஞ்சரிப்பது ஒரு வகையில் கெடுபலன்களைக் குறைக்க உதவும். இளம் வயது மேஷ ராசியினருக்கு இது அனுபவப் பாடங்களைக் கற்றுத் தரும் காலமாகவும், 40 முதல் 50 வயதுடையவர்களுக்கு பொங்கு சனியாக வந்து உழைப்பிற்கேற்ற முன்னேற்றத்தைத் தரும் காலமாகவும் அமையும்.
சனியின் பார்வை 2, 6, 9 ஆகிய இடங்களில் விழுவதால், குடும்பம் மற்றும் பொருளாதார ரீதியாக சில சங்கடங்கள் உருவாகும். குடும்ப உறுப்பினர்களிடையே, குறிப்பாகத் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளதால், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பண வரவு சீராக இருந்தாலும், சேமிப்பது கடினமாக இருக்கும்.
எதிர்பாராத மருத்துவச் செலவுகள் அல்லது சுப நிகழ்ச்சிகளுக்கான செலவுகள் வரிசையாக ஏற்படும். நிதி மேலாண்மையில் அதிகக் கவனம் தேவைப்படும் காலமிது. புதிய முதலீடுகளைச் செய்யும் போது ஒருமுறைக்கு இருமுறை ஆலோசிப்பது அவசியம். மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடுவதைத் தவிர்க்க வேண்டும். பூர்வீகச் சொத்து விவகாரங்களில் தற்போதைக்கு அமைதி காப்பதே நல்லது.
கூடுதல் பணிச்சுமை இருக்கும் என்பதால் தொழில் மற்றும் உத்தியோகத்தில் நேர மேலாண்மை மிகவும் அவசியம். உங்கள் ராசிக்கு 10-ம் இடத்து அதிபதி 12-ல் மறைவதால், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குத் தற்காலிகமாகப் பதவி உயர்வு அல்லது இடமாற்றம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.
வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு இந்த பெயர்ச்சி நல்ல லாபத்தையும், புகழையும் தரும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் கூட்டாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணியில் இருப்பவர்கள் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது, தேவையற்ற சிக்கல்களில் இருந்து உங்களைக் காக்கும்.
மாணவர்கள் ஆரம்பத்தில் சில தடைகளைச் சந்தித்தாலும், விடாமுயற்சியால் வெற்றி பெறுவார்கள். படிப்பில் கவனச்சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளதால், தியானம் மற்றும் மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது. உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு இது பொற்காலம்.
கலைத்துறையில் இருப்பவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் இழுபறி இருந்தாலும், உங்கள் படைப்பாற்றல் இறுதியாக அங்கீகரிக்கப்படும். கலைஞர்களுக்கு வெளியூர் பயணங்கள் மூலம் நல்ல வருமானமும், புகழும் கிடைக்கும்.
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது சிறந்த பலனைத் தரும். முதியோர்களை, அரவாணிகளை வணங்கி ஆசி பெறுவதும், ஆதரவற்ற அநாதைகளுக்கு, ஏழைகளுக்கு காலணிகள் அல்லது கருப்பு ஆடை, புளியோதரை தானம் செய்வதும் சனியின் தாக்கத்தைக் குறைக்கும்.
வாழ்வியல் ரீதியாக, நேர்மையான வழியில் நடப்பதும், மற்றவர் குற்றங்களை பெரிதுபடுத்தாமல் இருப்பதும் சனி பகவானின் அருளைப் பெற்றுத் தரும். ஒவ்வொரு சனிக்கிழமையும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைப்பதும், நாய்களுக்கு உணவிடுவதும் உங்கள் கர்ம வினைகளைக் குறைக்கும்.
ரிஷப ராசி நேயர்களுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி மாபெரும் ராஜயோக பலன்களை வழங்கப்போகிறது. உங்கள் ராசிக்கு 9 மற்றும் 10-ம் இடங்களுக்கு அதிபதியான தர்ம-கர்மாதிபதி சனி பகவான், இப்போது 11-ம் இடமான லாப ஸ்தானத்திற்கு இடம் பெயர்கிறார். இது ஜோதிட ரீதியாக ‘லாபச் சனி’ என்று போற்றப்படுகிறது. கடந்த காலங்களில் நீங்கள் அனுபவித்த போராட்டங்கள், தடைகள் மற்றும் குழப்பங்கள் அனைத்தும் பனிபோல் விலகி, தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும் பொற்காலம் இது.
சனியின் சஞ்சாரம் லாப ஸ்தானத்தில் அமையும் போது, உங்களின் தன்னம்பிக்கையும் தைரியமும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயரும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதுடன், நீண்ட காலக் கனவுகள் நனவாகும். சமூகத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் பலமடங்கு அதிகரிக்கும். இல்லறம் இனிக்கும்.
குடும்பம் மற்றும் பொருளாதார நிலையில் நல்ல மாற்றங்கள் இருக்கும். பிரிந்திருந்த குடும்பங்கள் ஒன்று சேரும், தம்பதியினரிடையே ஒற்றுமை பலப்படும். பலருக்கும் இப்போது திருமண யோகம் மற்றும் புத்திர பாக்கியம் கைகூடும். பொருளாதார ரீதியாக சிறந்த முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.
நிலுவையில் இருந்த தொகைகள் கைக்கு வந்து சேரும். புதிய சொத்துக்கள், வீடு, வாகனங்கள் வாங்கும் யோகம் வலுவாக உள்ளது. மூத்த சகோதர சகோதரிகள், நண்பர்களின் முழுமையான ஆதரவு உங்களுக்குப் பலம் சேர்க்கும். பொருளாதார ரீதியான சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து, நிம்மதியான சூழல் நிலவும். சொந்த பந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள்.
தொழில் மற்றும் உத்தியோகத்தைப் பொறுத்தவரை, புதிய வேலை தேடுபவர்களுக்கு உயர்ந்த சம்பளத்துடன் கூடிய வேலை அமையும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வும், விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். தொழிலதிபர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும்,
தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான நிதி உதவிகள் எளிதாகக் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களின் உழைப்பை அங்கீகரிப்பார்கள். கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாடு தொடர்பான வியாபாரம் செய்பவர்களுக்கு இது மிகவும் சாதகமான காலம் என்பதால், துணிச்சலாகப் புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம்.
கல்வி மற்றும் கலைத்துறையில் மாணவர்களுக்கு மிகச் சிறந்த சாதனை புரியும் வாய்ப்பு வரும். போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவர்கள் மாநில அளவிலான வெற்றிகளைப் பெறுவார்கள். உயர்கல்விக்காக நீங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும்.
கலைத்துறையில் உள்ளவர்களுக்குப் புகழும், கவுரவமும் கூடும். புதிய படங்களில் ஒப்பந்தமாவது அல்லது கலை நிகழ்ச்சிகள் மூலம் பெரும் வருமானம் ஈட்டுவது போன்ற யோகம் உண்டு. விளையாட்டுத் துறையில் உள்ளவர்கள் தங்களின் திறமையால் புதிய சாதனைகளைப் படைத்து, விருதுகளைப் பெறுவார்கள்.
சனிக்கிழமைகளில் உடல் ஊனமுற்றவர்களுக்கு உணவு வழங்குவதும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதும் சனி பகவானின் அருளைப் பெற்றுத் தரும். சனிக்கிழமைகளில் சிவபெருமான் சன்னதியில் எள் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்தது.
அதிக தன்னம்பிக்கையால் ஏற்படும் தவறுகளைத் தவிர்க்க வேண்டும். பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது உங்கள் வெற்றியை நிரந்தரமாக்கும். பசுக்களுக்கு அகத்திக்கீரை அல்லது வெல்லம் கலந்த அரிசி வழங்குவது மங்களகரமான பலன்களைத் தரும்.
மிதுன ராசி நேயர்களுக்குச் சனி பகவான் 9 மற்றும் 10-ம் இடங்களுக்கு அதிபதியாகிறார். அவர் இப்போது 10-ம் இடமான தொழில் மற்றும் கர்ம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இது கர்மச் சனி என்று அழைக்கப்படும் ஒரு நிலையாகும். 10-ம் இடத்தில் சனி அமர்வது என்பது கடின உழைப்பை தரவேண்டிய ஒரு காலகட்டமாகும். சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் சுறுசுறுப்பாகச் செயல்படுபவர்களுக்கு இந்தப் பெயர்ச்சி மிகச்சிறந்த பலன்களைத் தரும்.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு வரும்போது, சனியின் தாக்கத்தால் நீங்கள் மேற்கொண்ட கடின உழைப்பிற்கான பலன்கள் இரட்டிப்பாகக் கிடைக்கும். 12 ஆண்டுகால ஒரு கடினமான சுழற்சி முடிந்து, இனி வரும் காலம் உங்களுக்கு ராஜயோகமாக அமையப்போகிறது. சனியின் பார்வை உங்கள் ராசிக்கு 12, 4, 7 ஆகிய இடங்களில் விழுவதால், குடும்ப விவகாரம் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களில் திட்டமிட்ட நடைமுறையைக் கடைப்பிடிப்பது அவசியம்.
குடும்ப உறவுகளில் சிறு குழப்பங்கள் அல்லது புரிதல் குறைபாடுகள் ஏற்படும். ஆனால் ஜூன் 2026-க்குப் பிறகு அவை அனைத்தும் நீங்கி அமைதியான சூழல் நிலவும். வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் அக்கறை தேவை. பொருளாதார ரீதியாக, செலவுகள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
பண வரவு சீராக இருக்கும். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் திடீர் லாபம் கிடைக்கும். பழைய கடன்களை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள், குறிப்பாகத் திருமணம் அல்லது கிரகப்பிரவேசம் போன்ற நிகழ்வுகள் இனிதே நடைபெறும்.
தொழில் மற்றும் உத்தியோகத்தில் நிலையான தன்மை நிலவும். பணியிடத்தில் அதிகப் பொறுப்புகள் உங்களுக்கு வழங்கப்படும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது சரியான தருணம். சனி பகவான் உங்கள் தொழில் ஸ்தானத்தில் இருப்பதால், அடிமட்டத்திலிருந்து உழைப்பவர்களுக்கு உயர்ந்த பதவிகள் தேடி வரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு முழுமையாகக் கிடைக்கும். 2026-ம் ஆண்டின் இரண்டாம் பாதி பணவரவு மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கு மிகவும் சாதகமான காலகட்டம் ஆகும்.
கல்வியில் மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். நீண்ட நாட்களாகப் புரியாமல் இருந்த பாடங்கள் இப்போது நன்றாக புரியும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் உங்களுக்குப் பேருதவியாக இருக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்குக் கடின உழைப்பிற்குப் பிறகு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
உங்கள் படைப்பாற்றல் மிக்க பணிகள் பாராட்டப்படும். உங்களின் கலைத் திறமையை வெளிப்படுத்தச் சரியான வாய்ப்பு அமையும். கலைஞர்களுக்குப் புகழும், திறமைக்கேற்ற அங்கீகாரமும் கிடைக்கும். சமூக வலைதளங்கள் மூலம் உங்கள் பெருமை கலை உலகம் முழுவதும் பரவும்.
மிதுனம் ராசியினர் சனிக்கிழமைகளில் வில்வ அர்ச்சனை செய்து, சிவ வழிபாடு செய்வது சிறந்த பரிகாரமாகும். துளசி செடியின் அருகில் தீபம் ஏற்றி வழிபடுவதும், சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதும் சனியின் தாக்கத்தைக் குறைக்கும்.
பணியிடத்தில் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து, உங்கள் கடமையில் மட்டும் கவனம் செலுத்துவது உங்களை உயர்த்தும். கோவிலை வலம் வருவதும், பிரதோஷ காலங்களில் நந்திக்கு பால் அபிஷேகம் செய்வதும் மன அமைதி தரும். தினசரி கருப்புப் பசுவிற்கு உணவளிப்பது சனியின் அருளைப் பெற்றுத் தரும்.
கடக ராசி நேயர்களுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி ஒரு மாபெரும் விடுதலையைத் தருகிறது. கடந்த காலங்களில் நீங்கள் அனுபவித்த ‘அஷ்டமச் சனி’ கோளாறுகள் இப்போது முடிவுக்கு வருகிறது. சனியினால் நீங்கள் பட்ட கஷ்டங்கள், அவமானங்கள், இழப்புகள் அனைத்தும் நீங்கி, இனி அதிர்ஷ்டக் காற்றைச் சுவாசிக்கப் போகிறீர்கள். உங்கள் ராசிக்கு 7 மற்றும் 8-ம் இடங்களுக்கு அதிபதியான சனி பகவான், இப்போது 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு வருகிறார்.
இது ‘பாக்கியச் சனி’ என்று அழைக்கப்படுகிறது. அஷ்டமச் சனியால் இழந்த அனைத்தையும் மீட்டெடுக்கும் காலம் இது. தைரியம், தன்னம்பிக்கை மற்றும் உற்சாகம் உங்கள் வாழ்வில் மீண்டும் துளிர்விடும். எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும் அதில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை மனதில் உதயமாகும்.
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன திருமணத் தடைகள் நீங்கி சுப காரியங்கள் இனிதே நடக்கும். தந்தையுடனான உறவில் இருந்த விரிசல்கள் நீங்கி இணக்கம் ஏற்படும். பொருளாதார ரீதியாக, இதுவரை நிலவி வந்த நிதி நெருக்கடிகள் அனைத்தும் நல்லபடி தீரும்.
கடன்களை அடைப்பதற்கான வருமான வழிகள் பிறக்கும். பூர்வீகச் சொத்து விவகாரங்களில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்புகள் வரும். நீண்ட நாட்களாக நிறைவேறாத ஆசைகள் மற்றும் கனவுகள் ஒவ்வொன்றாக நிறைவேறத் தொடங்கும். குழந்தைகளால் பெருமிதம் கொள்ளும் சூழல் அமையும். திருமணம் ஆனவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டு.
தொழில் மற்றும் உத்தியோகத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருக்கும். பணியிடத்தில் உங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பதவி உயர்வு மற்றும் பெரிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதோடு, புதிய கிளைகளைத் தொடங்கும் யோகம் உண்டு.
வெளிநாட்டு வேலை அல்லது வெளிநாட்டில் படிக்க விரும்பியவர்களுக்கு இப்போது அதற்கான வாய்ப்புகள் கைகூடும். நண்பர்கள் மற்றும் மூத்தவர்களின் ஆதரவு உங்கள் வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருக்கும். உங்களின் செயல்திறன் மற்றவர்களால் அங்கீகரிக்கப்படும். வேலையிழந்தவர்களுக்கு மீண்டும் நல்ல வேலை கிடைக்கும்.
கல்வி மற்றும் கலைத்துறையில் மாணவர்கள் சாதனைகளைச் செய்வார்கள். ஆராய்ச்சிப் படிப்புகளில் இருப்பவர்களுக்குச் சிறந்த முன்னேற்றம் உண்டு. கலைத்துறையினருக்குப் புதிய மற்றும் பெரிய வாய்ப்புகள் வரும். கலைஞர்கள் தங்கள் துறையில் புகழ் பெறுவதோடு, பொருளாதார ரீதியாகவும் பலமடைவார்கள்.
ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வதற்கும், ஆன்மீகக் கலைகளில் ஈடுபடுவதற்கும் இது மிகவும் ஏற்ற காலம். படைப்பாளிகளுக்கு அவர்களின் உழைப்பிற்கான ராயல்டி மற்றும் அங்கீகாரம் முறையாக வந்து சேரும். வேதனைகள் சாதனைகளாக மாறும். புதிய தளங்களில் உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்துவீர்கள்.
கடக ராசியினர் சனிக்கிழமைகளில் அம்பிகைக்கு பசும்பால் அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பாகும். திருச்செந்தூர், குச்சனூர் அல்லது திருநள்ளாறு ஆகிய தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது அஷ்டமச் சனியின் மிச்சமுள்ள தாக்கத்தையும் நீக்கும்.
கிடைத்த வெற்றிகளால் பெருமிதம் கொள்ளாமல், மற்றவர்களுக்கு உதவி செய்வதைத் தொடர்வது சனியின் அருளை நிலைக்கச் செய்யும். செவ்வரளி மலர்களால் வராஹி அல்லது முருகப்பெருமானை வழிபடுவது கூடுதல் பலம் சேர்க்கும். சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றுவதும் மிகச்சிறந்த பரிகாரமாகும்.
கணித்தவர்: சிவகிரி ஜானகிராமன்