ஆண்களின் திருமணத் தடையை அகற்றும் ஹோமம்


ஆண்களின் திருமணத் தடையை அகற்றும் ஹோமம்
x

ஜாதகத்தில் குடும்பஸ்தானமான இரண்டாம் இடத்தில் நீச்ச கிரகங்கள் இருப்பது, களத்திர ஸ்தானாதிபதியான ஏழுக்குடையவன் நீச்சம் அடைந்திருப்பது போன்ற பல கிரக அமைப்புகள் திருமண தடையை ஏற்படுத்தும்.

நீண்ட நாட்களாக திருமணமாகாத ஆண்களுக்கு திருமண பாக்கியத்தை பெறும் வகையில் செய்யப்படுவது ஸ்ரீகந்தர்வராஜ ஹோமம் ஆகும். இதேபோல் பெண்கள் திருமண பாக்கியம் பெறுவதற்காக செய்யப்படுவது சுயம்வரகலா பார்வதி ஹோமம் ஆகும்.

ஆண்களைப் பொறுத்தவரை ஜோதிட ரீதியாக கீழ்க்கண்ட கிரக அமைப்புகள் திருமணம் நடப்பதை தாமதம் ஆக்குகின்றன. (பெண்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும்)

•குடும்பஸ்தானமான இரண்டாம் இடத்தில் நீச்ச கிரகங்கள் இருப்பது

•களத்திர ஸ்தானாதிபதியான ஏழுக்குடையவன் நீச்சம் அடைந்திருப்பது

•ஏழாமிடத்தில் நீச்சம் அல்லது வக்கிரம் பெற்ற கிரகம் அமர்ந்திருப்பது

•சுக்கிரன் மறைவு ஸ்தானங்களில் இருந்து அசுபர் பார்வை பெறுவது

•ஏழாமிடம், ஏழாம் அதிபதிக்கு சனி சேர்க்கை, பார்வை இருப்பது

•சுக்கிரன் இரண்டில், ஏழில் இருந்து பாதிக்கப்படுவது

•ஏழாம் அதிபதியோடு ராகு, கேது சேர்க்கை இருப்பது

•நீச்ச சுக்கிரன், சனி, செவ்வாய் பார்வை, சேர்க்கை பெறுவது,

•சனி, செவ்வாய் ஏழில் இருந்து சந்திரன், சுக்கிரன் பரஸ்பர மறைவு பெறுவது

•ராகு, கேதுக்கள் லக்னம், ஏழில் இருந்து சுக்கிரன் சம்பந்தம் பெறுவது

•ஏழாம் அதிபதி சூரியனோடு சேர்ந்து அஸ்தங்கம் அடைவது

•ஏழாமிடம் பாபகர்த்தாரி அமைப்பில் இருப்பது

•ஏழாம் அதிபதி நவாம்ச லக்னத்துக்கு பன்னிரெண்டில் இருப்பது

•குரு, சந்திரன் ஆகியோர் ஆறு, எட்டு, பனிரெண்டில் நீச்சம் பெறுவது

•குரு, சூரியன் இணைந்து லக்னம், ஏழில் அமர்வது

•லக்னம், ராசிக்கு ஏழாமிடம் சுபர் பார்வையின்றி பாவர் தொடர்பு பெறுவது

•குரு, சுக்கிரன், சூரியன் ஆகியோருக்கு பனிரெண்டில் சனி இருப்பது

மேற்கண்ட விதிகள் தவிரவும் பல ஜோதிட விதிகள் காரணமாகவும் திருமணம் தாமதம் ஆகலாம்.

ஆண்களின் தாமத திருமணத்தை நிவர்த்தி செய்யும் வகையில் செய்யப்படும் ஸ்ரீகந்தர்வராஜ ஹோமம் பற்றிய விபரங்களைப் பார்ப்போம்.

விஷ்ணு புராணத்தின்படி கந்தர்வர்கள் பிரம்மாவின் மகன்களாக குறிப்பிடப்படுகிறார்கள். பத்ம புராணம் கந்தர்வர்களை சரஸ்வதி தேவியின் நாவில் இருந்து உருவானவர்களாக குறிப்பிடுகிறது. அதர்வண வேதம் கந்தர்வர்களுடைய எண்ணிக்கையை 6333 என்று குறிப்பிடுகிறது.

சரஸ்வதி தேவியின் நாவில் இருந்து தோன்றியதால் காந்தர்வம் என்ற சங்கீதம், நாட்டியம் உள்ளிட்ட பல கலைகளை முழுவதும் அறிந்தவர்களாக அவர்கள் இருந்தார்கள். வானவில், பௌர்ணமி சந்திர ஒளி, அதிகாலை சூரிய ஒளி, மிகப்பெரிய மரங்கள், அடர்ந்த காடுகள், நீர் நிலைகள் ஆகியவற்றில் அழகிய பறவைகள், குதிரைகள் போன்று கந்தர்வர்கள் வசிப்பதாக குறிப்பிடப்படுகிறது.

ஆல மரங்களில் வசிக்கும் கந்தர்வர்கள், அவர்களது துணைகளான அப்சரஸ் பெண்களுடன் சேர்ந்து பூமியில் நடக்கும் திருமண ஊர்வலங்களை ஆசீர்வாதம் செய்வதாக அதர்வண வேதம் தெரிவிக்கிறது.

அமிர்தத்தை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள கந்தர்வர்கள் மங்களகரமான திருமண சடங்குகளில் பயன்படுத்தப்படும் தீர்த்தங்களில் இருப்பதாக ஐதீகம். அவ்வகையில் ரிக் வேத திருமண மந்திரங்களில் கந்தர்வர்கள் மணமக்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்கு தேவர்களது ஆசிகளை பெற்று தருவதாக குறிப்பிடுகிறது.

அப்சரஸ் பெண்களில் ரம்பா, ஊர்வசி, மேனகா, திலோத்தமை, சுப்ரியா, அருணா, ரட்சிதா, சுரதா ஆகியோர் முக்கியமானவர்கள். கந்தர்வர்களில் நாரதர், சித்திரசேனன், சித்ராங்கதன், தும்புரு, சித்தரரதா ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.

தேவர்களுக்கு இணையான சக்தி பெற்ற கந்தர்வர்களை இசை, மந்திரம், ஹோமம் மூலம் தேவர்களை விட எளிதாக அணுக முடியும். அவ்வாறு அணுகி வரம் கேட்டால், எப்போதும் மகிழ்ச்சியாக உள்ள அவர்கள் கேட்கும் வரத்தை உடனடியாக அருள்கிறார்கள். அவ்வகையில் ஆண்களுக்கு திருமண பாக்கியத்தை அருள ஹோமம் செய்து வேண்டினால் அது நிறைவேறும் என்பது ஐதீகம்.

கட்டுரையாளர்: சிவகிரி ஜானகிராம்

1 More update

Next Story