வாஸ்து கூறும் வீட்டு வரைபடம்

வாஸ்து புருஷ மண்டலம் என்பது சதுரமான வடிவத்தில் அமைந்து, எண் திசைகள், பிரம்மஸ்தானம் ஆகியவற்றை குறிப்பிடுகிறது.
Vasthu for house
Published on

வாஸ்து புருஷ மண்டலம் என்பது பூமியின் குறிப்பிட்ட ஒரு பகுதியில், காஸ்மிக் எனர்ஜி என்ற பிரபஞ்ச சக்தி செயல்படும் முறை பற்றி சொல்கிறது. அதை அடிப்படையாக கொண்டே வீடுகள், வணிக வளாகங்கள், கோவில் உள்ளிட்ட பல்வேறு வகையான கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன. பூமியில் அஸ்திவாரமிட்டு கட்டப்படும் எவ்வித கட்டிடத்துக்கும் வரைபடம் அவசியம். அதன் அடிப்படையில், எக்காலத்துக்கும் பொருந்தும் நிலையான வரைபடமாக வாஸ்து புருஷ மண்டலம் உள்ளது.

வாஸ்து புருஷ மண்டலம் என்பது சதுரமான வடிவத்தில் அமைந்து, எண் திசைகள், பிரம்மஸ்தானம் ஆகியவற்றை குறிப்பிடுகிறது. ஒவ்வொரு பாகத்திலும் எவ்வித அமைப்புகள் இருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. வாஸ்து புருஷனின் தலை, இருதயம், மார்பு, நாபி ஆகிய பகுதிகளுக்கு அதிக கவனம் செலுத்தி, அந்த பகுதிகளில் அதிக எடை கொண்ட கட்டுமானங்கள் அமைப்பது, பொருட்கள் வைப்பது அல்லது தூண்கள் கட்டமைப்பு ஆகியவை தவிர்க்கப்பட்டது.

தென் திசை நோக்கி சூரியன் பயணிக்கும் தட்சிணாயனம் மற்றும் வட திசை நோக்கி பயணிக்கும் உத்தராயணம் ஆகிய காலங்களில் வீடுகளுக்கு கிடைக்கும் வெப்பம், வெளிச்சம், மழை மற்றும் காற்று ஆகியவற்றில் மாற்றங்கள் உருவாகின்றன. அதனால், மார்ச் முதல் மே மாதம் வரை வடக்கு திசையும், ஜூன் முதல் ஆகஸ்டு மாதம் வரை தெற்கு திசையும், செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை கிழக்கு திசையும், டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை மேற்கு திசையும் வாஸ்து ரீதியாக முக்கியத்துவம் பெறுகின்றன. அதை கணக்கிட்டுத்தான் வீட்டின் தலைவாசல்கள் அமைக்கப்பட்டன.

பூமியின் சுழற்சிக்கேற்பவும், குறிப்பிட்ட நேரத்தில் சூரியன் மற்றும் இதர கிரகங்கள் இருக்கும் நிலைக்கேற்பவும் மனிதர்களின் உடல் மற்றும் மன இயக்கத்தில் மாற்றங்கள் ஏற்படுவது அறியப்பட்டது. அவை, மனிதர்களின் உடல் மற்றும் மனம் ஆகியவற்றில் நன்மை தரும் வகையில் கட்டிடங்கள் திட்டமிட்டு கட்டப்பட்டன. ஒரு நாளின் 24 மணி நேரமானது, எட்டு திசைகளை கருத்தில் கொண்டு 8 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டன. குறிப்பிட்ட திசையின் தன்மைகள் மனிதர்களின் அன்றாட வாழ்வில் தாக்கம் செலுத்தும் அடிப்படையில் கட்டிடங்கள் உருவாக்கப்பட்டன. 

கட்டுரையாளர்: சிவகிரி ஜானகிராம்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com