தமிழர் மரபில் வாஸ்து என்ற கட்டுமான கலை இயல்

கட்டிடக் கலையின் அடிப்படைகளை நமது பாரம்பரிய கட்டிட கலை இயலான வாஸ்து சாஸ்திரம் வரையறுத்து தந்துள்ளது.
வாஸ்து என்ற கட்டுமான கலை இயல்
Published on

வாஸ்து சாஸ்திரம் என்ற கட்டுமானக் கலை இயல் தமிழகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கடைபிடிக்கப்பட்டது. அவ்வகையில் சங்க நூல்களில் ஒன்றான பத்துப்பாட்டில் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் படைத்த நெடுநல்வாடை எனும் நூலில் கீழ்க்கண்ட குறிப்பு காணப்படுகிறது.

"நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்

தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்

பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து

ஒருங்குடன் வளைஇ ஓங்குநிலை வரைப்பிற்

பருவிரும்பு பிணித்துச் செல்வரக் குரீஇத்"

அதாவது, சிற்பநூல் அறிந்த தச்சர் நூலை நேரே பிடித்துத் திசைகளைக் குறித்துக்கொண்டு, திசைகளில் நிற்கும் தெய்வங்களை கூர்ந்து பார்த்து, அரசர்கள் வாழ்வதற்கு ஏற்ப மனைகளையும், வாயில்களையும், மண்டபங்களையும், பிறவற்றையும் ஒருசேர வகைப்படுத்தி, தக்க விதமாக வளைத்து உயர்ந்து நிற்கும் மதிலின் உட்புறமாக அமைக்கப்பட்டது என அர்த்தம் தருகிறது.

அவ்வகையில், 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் மனைகளை அளந்து கட்டிடங்களை அமைக்க வழிகாட்டி நூல்கள் இருந்தன. அதன் பின்னர் வந்த பல்வேறு காலகட்ட அறிஞர் பெருமக்களால் பல வாஸ்து நூல்கள் படைக்கப்பட்டன.

அவற்றில் ஆச்வலாயன கிருஹ்ய ஸூத்ரபாஷ்யம், விஸ்வகர்ம வாஸ்து சாஸ்திரம், காச்யப சில்ப சாஸ்திரம். சகலாதிகாரம், சில்பரத்னம் ஆகியவை முக்கியமானவை.

அத்துடன் மன்னர் போஜனின் ஸமராங்கண ஸூத்ரதாரா மற்றும் விச்வகர்ம மயமதம் போன்ற சுவடிகளில் கட்டிடக்கலை பற்றி பல விரிவான செய்திகள் உள்ளன.

அப்படிப்பட்ட ஒரு நூலில், வீட்டின் மாடி தளத்தை எத்தனை அடுக்குகளாக அமைக்கலாம் என்பதை,

ஒற்றை அடுக்கு என்ற ஏகசாலா 108 வகைகளாகவும்,

இரண்டு அடுக்கு என்ற த்விசாலா 52 வகைகளாகவும்,

மூன்று அடுக்கு என்ற த்ரிசாலா 72 வகைகளாகவும்,

நான்கு அடுக்கு என்ற சதுஸ்சாலா 250 வகைகளாகவும்,

ஐந்து அடுக்கு என்ற பஞ்சசாலா 1025 வகைகளாகவும்,

ஆறு அடுக்கு என்ற ஷட்சாலா 4090 வகைகளாகவும்

அடுக்கு மாடிகளை அமைக்கலாம் என்றும், அவற்றில் மங்களகரமான வாழ்வை அளிக்கக்கூடியவை எவை என்பது பற்றியும் பல்வேறு அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நகரங்களின் அமைப்பில் வர்கா (சதுரம்), ஆயதா (செவ்வகம்), வர்த்துலா (வட்டம்), அந்தாகார (நீள் வட்டம்) உள்ளிட்ட பல வடிவங்களில் திட்டமிட்டு அமைக்கப்பட்டன.

விண்ணை முட்டும் கட்டிடங்கள் அமைப்பதற்குரிய தொழில்நுட்பங்களுக்கு அச்சாரமாக கட்டிடக்கலையின் அடிப்படைகளை நமது பாரம்பரிய கட்டிட கலை இயலான வாஸ்து சாஸ்திரம் வரையறுத்து தந்துள்ளது என்பதை தெளிவாக அறிய முடிகிறது.

கட்டுரையாளர்: சிவகிரி ஜானகிராம்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com