’பணப்புழக்கம் அதிகரிக்கும்..’ வார ராசிபலன் 12-04-2026 முதல் 18-04-2026 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.
’பணப்புழக்கம் அதிகரிக்கும்..’ வார ராசிபலன் 12-04-2026 முதல் 18-04-2026 வரை
Published on

வார ராசி பலன்

மேஷம்

உச்ச சூரியன் பலம் காரணமாக உங்களுடைய ஆளுமை திறன் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட பல விஷயங்கள் பல விதமாக நடந்து முடியும். எதையும் சாதிக்கும் உத்வேகம் மனதில் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளுக்கான அடிப்படை விஷயங்கள் வீட்டில் நடக்கும்.

குடும்ப உறவுகளில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களிடையே உங்கள் சொல்லுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். சமூகத்தில் அந்தஸ்து மிக்க நபர்களின் நட்பு கிட்டும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகளும், மக்கள் செல்வாக்கும் உயரும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. புதிய முதலீடுகள் செய்ய உகந்த காலம் இது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும். வணிக ரீதியான பயணங்கள் வெற்றி பெறும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உஷ்ணம் சம்பந்தமான உடல் உபாதைகள் ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். அதிகாலை நேரங்களில் சிவபெருமானை வில்வ தளம் கொண்டு அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது. காளை மாட்டுக்கு கோதுமை உணவு மற்றும் அகத்திக்கீரை வழங்குவது நன்மை தரும்.

ரிஷபம்

சுபச் செலவுகள் கூடுதலாக ஏற்படும் வாரம் இது. ஆன்மீக ஸ்தலங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று வருவீர்கள். மனதில் உள்ள இனம் புரியாத கவலைகள் விலகும். உங்களுடைய தனிப்பட்ட திறமைகள் வெளிப்படும் காலகட்டம் இது. சிக்கல்கள் விலகி வெற்றி பெறுவீர்கள்.

குடும்ப விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். விட்டுக் கொடுத்துச் செல்வது அமைதியைத் தரும். சமூக விவகாரங்களில் ஒதுங்கியிருப்பது நல்லது. நண்பர்களுடன் பழகும்போது வெளிப்படைத்தன்மை தேவை.

வியாபாரிகள் பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடும். உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் சற்றுத் தாமதமாகக் கிடைக்கும். வெளிநாடு தொடர்பான வணிகங்களில் ஆதாயம் கிட்டும். புதிய முயற்சிகளை இந்த வாரம் தள்ளிப்போடவும்.

கண் எரிச்சல் அல்லது கால் வலி ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபமேற்றி வழிபாடு செய்வது பொருளாதாரத் தடையை நீக்கும். பார்வையற்றவர்களுக்கு அன்னதானம் செய்வது மற்றும் ஆதரவற்றோருக்கு உதவுவது நல்லது.

மிதுனம்

மிதுன ராசியினருக்கு நீண்ட காலக் கனவுகள் நனவாகும். எதிர்பாராத பணவரவும், பாராட்டுகளும் தேடி வரும். உங்கள் புத்திக்கூர்மையால் சிக்கலான பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒரு சுப செய்தி உங்களை வந்தடையும்.

சமூகத்தில் கௌரவம் பன்மடங்கு உயரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பேராதரவு கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு மக்கள் ஆதரவு பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உற்றார் உறவினர்களின் வருகை உற்சாகத்தைத் தரும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உச்சங்களைத் தொடுவீர்கள். கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிட்டும், சிலருக்குப் பணியிட மாற்றம் சாதகமாக அமையும்.

ஆரோக்கியம் சீராக இருப்பினும் நரம்பு சம்பந்தமான சிறு தொந்தரவுகள் ஏற்பட்டு விலகும். மகாவிஷ்ணுவை வழிபட்டு துளசி அர்ச்சனை செய்வது, மாணவர்களின் கல்விக்கு உதவி செய்வது, ஏழைகளுக்குப் பச்சைப்பயறு தானம் செய்வது நல்வாழ்வை அளிக்கும்.

கடகம்

கடக ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் புகழும், கீர்த்தியும் உண்டாகும். உங்கள் உழைப்பிற்குப் பலன் கிடைக்கும். சமுதாயத்தில் பெரிய மனிதர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவது அல்லது வீட்டைப் புதுப்பிப்பது போன்ற எண்ணங்கள் நிறைவேறும்.

பிள்ளைகளின் முன்னேற்றம் மனதிற்குத் திருப்தி தரும். சமூகப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்குப் புதிய அங்கீகாரம் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்கள் உயரிய பதவிகளைப் பெறுவர். நண்பர்களுடன் ஏற்பட்ட மனத்தாங்கல்கள் நீங்கி நட்பு பலப்படும்.

தொழில் ரீதியாகப் பெரிய முன்னேற்றம் இருக்கும். புதிய கிளைகளைத் தொடங்குவது அல்லது தொழிலை விரிவுபடுத்துவது, அரசு வழி காரியங்கள் தடையின்றி முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும்.

எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான வலிகள் ஏற்பட்டு அகலும். சிவபெருமானுக்குப் பால் அபிஷேகம் செய்து வழிபடுவது மன அமைதியைத் தரும். தயிர் சாதம் தானம் செய்வது மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவுவது தடைகளை நீக்கி வளமான வாழ்வைத் தரும்.

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு தந்தை வழி சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். தந்தையின் ஆதரவு பூரணமாகக் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் அல்லது வெளியூர் பயணங்களுக்கான வாய்ப்புகள் அமையும். ஆன்மீக நாட்டம் அதிகரித்து குருவருளும் திருவருளும் உங்களுக்குத் துணையாக நிற்கும்.

குடும்பத்தில் மூத்தவர்களின் ஆலோசனைகள் உங்களுக்குப் பேருதவியாக இருக்கும். உறவினர்களிடையே இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்குடன் கூடிய பொறுப்புகள் தேடி வரும். சமூக அந்தஸ்து உயரும். ஆன்மீகப் பெரியோர்களின் ஆசி கிட்டும்.

தொழில் மற்றும் பணிகளில் புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். வியாபாரத்தில் இதுவரை இருந்த மந்த நிலை மாறி விறுவிறுப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். நீண்ட கால முதலீடுகள், ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும்.

தசை பிடிப்பு, முதுகு வலி ஏற்பட்டு விலகும். தினமும் ஆதித்ய ஹிருதயம் கேட்பது மிகுந்த நன்மையளிக்கும். கோதுமை உணவுகளை ஏழைகளுக்கு வழங்குவது மற்றும் கோயில் திருப்பணிகளுக்கு உதவுவது உங்கள் வாழ்வை ஒளிமயமாக்கும்.

கன்னி

கன்னி ராசியினர் அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் அவசரம் காட்டக்கூடாது. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இருப்பினும், மறைமுகமான வழிகளில் சில ஆதாயங்கள் வரும். கடின உழைப்புக்கான பலன் எதிர்காலத்தில் நிச்சயமாகக் கிடைக்கும்.

குடும்ப விவகாரங்களை வெளியாட்களிடம் பகிர வேண்டாம். உறவினர்களுடன் பேசும்போது நிதானம் தேவை. சமூகத்தில் உங்கள் பெயருக்குக் களங்கம் வராதபடி நடந்து கொள்வது அவசியம். நண்பர்களின் உதவியை நாடும்போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செயல்படவும்.

தொழிலில் போட்டிகள் அதிகரிக்கும். லாபம் மிதமாகவே இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு குறைவுபடலாம், மேலதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. பண விஷயத்தில் யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்.

செரிமானக் கோளாறுகள் ஏற்பட்டு விலகும். ஏழை மாணவர்களுக்குப் படிப்புச் செலவிற்கு உதவுவது மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அன்னதானம் செய்வது உங்கள் கிரக தோஷங்களைக் குறைத்து நல்வாழ்வு தரும். இயன்றவரை மகாவிஷ்ணுவிற்கு வாசனை மலர்கள் சமர்ப்பித்து வணங்கவும்.

துலாம்

கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும் வாரமம். திருமண முயற்சிகளில் வெற்றி தரும். வாழ்க்கைத் துணையின் வழியில் எதிர்பாராத உதவிகளும் மகிழ்ச்சியும் உண்டாகும். உங்கள் வசீகரமான பேச்சால் பலரையும் கவர்வீர்கள். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு இது பொற்காலம்.

குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். அரசியல் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிட்டும். புதிய நபர்களின் அறிமுகம் ஆதாயம் தரும்.

வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வியாபாரம் செழிக்கும், பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வுண்டு. வெளியூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும்.

சிறுநீரகப் பாதை தொற்றுக்கள் ஏற்பட்டு சிகிச்சையால் அகலும். மகாலட்சுமிக்கு மல்லிகை பூவால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யவும். ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவி செய்வது மற்றும் சுமங்கலிப் பெண்களுக்கு மங்கலப் பொருட்கள் வழங்குவதும் நலம் தரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு எதிர்ப்புகள் விலகும். வழக்கு விவகாரங்களில் வெற்றி கிட்டும். நீண்ட நாட்களாக தொந்தரவு செய்த கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட வழி பிறக்கும். நிர்வாகத் திறமை வெளிப்படும் வாரமாக இது இருக்கும்.

குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களிடையே கருத்து வேறுபாட்டை குறைத்துக் கொள்வது நல்லது. அரசியல்வாதிகள் எதிரிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். சமூக அளவில் நண்பர்கள் வட்டாரம் விரிவடையும்.

தொழிலில் போட்டிகளைச் சமாளித்து முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய சவால்களை முறியடித்து வெற்றி காண்பீர்கள். வங்கி மற்றும் காப்பீடு துறைகளில் இருப்பவர்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டு. வியாபாரத்தில் பழைய முதலீடுகள் பலன் தரத் தொடங்கும்.

ஆரோக்கியம் மேம்படும், நீண்ட கால நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உதவுவது மற்றும் ஏழைகளுக்குப் போர்வைகள் தானம் செய்வது உங்கள் வாழ்வின் தடைகளை நீக்கி வெற்றியைத் தரும்.

தனுசு

இந்த வாரம் புண்ணிய பலன்கள் கைகூடும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வரும். உங்களின் படைப்பாற்றல் மற்றும் கலைத் திறமைகள் வெளிப்படும். பூர்வீக சொத்து விவகாரங்களில் சுமுகமான தீர்வு ஏற்படும். குலதெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதி தரும்.

உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி இணக்கம் உண்டாகும். அரசியலில் இருப்பவர்களுக்கு மேலிடத்தின் ஆசி கிட்டும். சமூகத்தில் உங்கள் அறிவுரைக்கு மதிப்பு கூடும். கலைத்துறையில் இருப்பவர்களுக்குப் புகழும் வாய்ப்புகளும் தேடி வரும்.

தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்து லாபத்தை அதிகரிப்பீர்கள். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல பலனைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய முதலீடுகள் செய்ய இது பொற்காலம்.

தலைவலி அல்லது உடல் சோர்வு ஏற்பட்டு விலகும். மஞ்சள் மலர்களால் அருகிலுள்ள தெய்வங்களை அர்ச்சனை செய்து வழிபடவும். ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்குவது மற்றும் பசுவிற்குப் பழங்கள் கொடுப்பது உங்கள் வாழ்வை வளப்படுத்தும்.

மகரம்

புதிய வாகனம் அல்லது பூமி வாங்கும் யோகம் கைகூடி வரும். வீட்டைப் புதுப்பிக்கும் பணிகளில் ஈடுபடுவீர்கள். இதுவரை நிலவி வந்த அலைச்சல்கள் குறைந்து மனதிற்குத் திருப்தி தரும் சம்பவங்கள் நடைபெறும். வெளியூர் பயணங்கள் அனுகூலமாக அமையும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உறவினர்களுடன் விருந்து மற்றும் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசியலில் இருப்பவர்களுக்குப் பதவியும் புகழும் தேடி வரும். குடும்பப் பெரியவர்களின் ஆசி உங்கள் காரியங்களுக்குத் துணையாக இருக்கும்.

தொழில் ரீதியாக வளர்ச்சி இருக்கும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் கிட்டும். உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது பணியிட மாற்றம் சாதகமாக அமையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

இதயம் அல்லது நுரையீரல் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏற்பட்டு விலகும். சிவ பெருமானுக்கு மாலை நேரம் தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது. வாயில்லாப் பிராணிகளுக்கு உணவு வைப்பதும், ஏழை முதியவர்களுக்கு வஸ்திர தானம் செய்வதும் நல்லது.

கும்பம்

கும்ப ராசியினருக்கு வெற்றிகரமான வாரம். இளைய சகோதரர்களின் ஆதரவு கிட்டும். தகவல் தொடர்பு மற்றும் எழுத்துத் துறையில் இருப்பவர்களுக்குச் சிறப்பான முன்னேற்றம் உண்டு. குறுகிய தூரப் பயணங்கள் அனுகூலமான செய்திகளைக் கொண்டு வரும்.

உறவினர்களிடையே உங்கள் மதிப்பும் செல்வாக்கும் உயரும். நண்பர்களுடன் இணைந்து சில புதிய காரியங்களைச் செய்வீர்கள். அரசியல்வாதிகளுக்குத் தொண்டர்களின் ஆதரவு பெருகும், புதிய பொறுப்புகள் தேடி வரும். பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் வாய்ப்பு அமையும்.

விற்பனைப் பிரதிநிதிகள் மற்றும் தரகுத் தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் ஆதாயம் கிட்டும். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும்.

தோள்பட்டை அல்லது கை கால்களில் வலி ஏற்பட்டு விலகும். துப்புரவுப் பணியாளர்களுக்கு பணம், பொருள் உதவி செய்வது, கருப்பு எள் கலந்த புளியோதரை உணவை கோவில் வாசலில் உள்ள ஏழைகளுக்கு வழங்குவது துன்பங்களை நீக்கி இன்பம் தரும்.

மீனம்

மீன ராசி அன்பர்களுக்கு பொருளாதார நிலையில் மாற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பேச்சினால் காரியங்களைச் சாதிப்பீர்கள். கண்களில் இருந்த பாதிப்பு நீங்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் வாரமிது.

குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். அரசியலில் இருப்பவர்களுக்குப் பேச்சாற்றலால் பெரும் வெற்றி கிடைக்கும், உயர்மட்டத் தலைவர்களின் நெருக்கம் கிட்டும். சமூகத்தில் கௌரவமான பதவி தேடி வரும்.

தன வரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு கிட்டும். பழைய கடன்களை அடைக்கத் தேவையான பணம் கைக்கு வரும். உங்களின் நிதி மேலாண்மைத் திறன் பாராட்டுப் பெறும்.

முகத்தில் பருக்கள் அல்லது கண் எரிச்சல் வந்து விலகும். தினமும் பொது இடங்களில் மஞ்சள் நிற இனிப்புகளைத் தானம் செய்வது நல்லது. ஏழைகளுக்கு உணவு வழங்குவது, கோயில் விளக்கு ஏற்ற எண்ணெய் வாங்கித் தருவது உங்கள் வாழ்வை ஒளிமயமாக்கும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com