மும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 19 பேர் பலி- உயிரோடு புதைந்த சோகம்

மும்பை குர்லாவில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில் இடிபாடுகளில் புதைந்து 19 பேர் பலியானார்கள்.
மும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 19 பேர் பலி- உயிரோடு புதைந்த சோகம்
Published on

மும்பை, 

மும்பை குர்லாவில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில் இடிபாடுகளில் புதைந்து 19 பேர் பலியானார்கள்.

4 மாடி கட்டிடம்

மும்பை குர்லா கிழக்கு, நாயக் நகர் பகுதியில் பஸ் டெப்போ பின்புறம் 4 மாடிகளை கொண்ட பழமையான குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் நேற்று இரவு 11.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. சீட்டு கட்டுகள் போல சரிந்து தரைமட்டமானது. இதனால் அந்த கட்டிடத்தில் வசித்து வந்தவர்கள் இடிபாடுகளில் உயிரோடு புதைந்தனர்.

இதற்கிடையே பூகம்பம் ஏற்பட்டதை போல சத்தம் கேட்டதால் அருகில் உள்ள கட்டிடத்தில் வசிப்பவர்கள் அலறியடித்து ஓடிவந்தனர். அவர்கள் 4 மாடி கட்டிடம் தரைமட்டமாகி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். இந்தநிலையில் கட்டிடம் இடிந்த தகவலின் பேரில் 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. இதேபோல தேசிய பேரிடர் மீட்பு படையினரும் விரைந்தனர்.

 19பேர் பலி

அவர்கள் இடிபாடுகளை அகற்றி, உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். மீட்பு பணிக்காக ஜே.சி.பி. எந்திரங்கள், வெல்டிங் மிஷின், மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டன.

மழையையும் பொருட்படுத்தாமல் விடிய, விடிய மீட்பு பணிகள் நடந்தது. நேற்றும் மீட்பு பணி நீடித்தது. இந்தநிலையில் பலர் பிணமாகவும், மேலும் பலர் உயிருடனும் மீட்கப்பட்டனர். இதில் 19 பேர் உயிரிழந்தது தெரியவந்தது.

விபத்து நடந்து சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு பெண் ஒருவரை இடிபாடுகளில் இருந்து உயிரோடு மீட்டபோது, மீட்பு படையினர் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். இவ்வாறு 14 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இதற்கிடையே உயிரிழந்தவர்களில் 8 பேரின் பெயர் விவரம் தெரியவந்தது. அவர்கள் அஜய் பாஸ்போர் (வயது28), கிஷோர் (20), சிக்கந்தர் (21), அர்விந்த் ராஜேந்திர பாரதி (19), அனுப் ராஜ்பர் (18), அனில் யாதவ் (21), ஷியாம் பிரஜாபதி (18), லீலாபாய் கெய்க்வாட் (60) ஆவர்.

கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலானவர்கள் கூலித்தொழிலாளர்கள் ஆவர்.

அபாயகரமான கட்டிடம்

இதற்கிடையே கட்டிட விபத்து நடந்த பகுதியை நகர்புற மேம்பாட்டு துறை மந்திரி அனில் தேசாய், சுற்றுலா துறை மந்திரி ஆதித்ய தாக்கரே, மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால், மும்பை கலெக்டர் நிதி சவுத்ரி உள்ளிட்டவர்கள் பார்வையிட்டனர்.

பின்னர் மாவட்ட கலெக்டர் நிதி சவுத்ரி கூறுகையில், "கட்டிட விபத்து நடந்த நிலம் 1966-ம் ஆண்டு நாயக் நகர் சொசைட்டிக்கு வழங்கப்பட்டது. அங்கு 1975-ம் ஆண்டு கட்டிடங்கள் கட்டப்பட்டன. மாநகராட்சி இந்த கட்டிடத்தை அபாயகரமான கட்டிடம் என அறிவித்து இருந்தது. இந்த விவகாரத்தில் மாநகராட்சி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும்" என்றார்.

மேலும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "கட்டிடம் அபாயகரமான நிலையில் இருந்ததால், அதில் வசித்த பலர் வெளியேறிவிட்டனர். எனினும் அவர்கள் அந்த வீடுகளை தொழிலாளர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளனர்" என்றார்.

இழப்பீடு அறிவித்த ஷிண்டே

மந்திரி சுபாஷ் தேசாய் கட்டிட விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்து உள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதேபோல அசாமில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் முகாமில் உள்ள குர்லா எம்.எல்.ஏ. மங்கேஷ் குடல்கர் கட்டிட விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் அவர் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் மந்திரி ஏக்நாத் ஷிண்டே வழங்குவார் என தெரிவித்து உள்ளார்.

மும்பையில் மழைக்காலங்களில் கட்டிட விபத்துக்கள் நடப்பது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் மும்பையில் நடந்த 3-வது கட்டிட விபத்து இதுவாகும். கடந்த 23-ந் தேதி செம்பூர் பகுதியில் கட்டிட சிலாப் இடிந்து 22 வயது வாலிபர் பலியானார். 10 பேர் காயமடைந்தனர். கடந்த 9-ந் தேதி பாந்திராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து 55 வயது நபர் பலியானார். 18 பேர் காயமடைந்தனர்.

--------------

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com