பாம்பன் குந்துகால் கடற்கரையில் 22 மூடை மஞ்சள், கடல் அட்டைகள் பறிமுதல் - இலங்கைக்கு கடத்த முயன்ற 3 பேர் கைது

பாம்பன் குந்துகால் கடற்கரையில் 22 மூடைகளில் இருந்த மஞ்சள் மற்றும் கடல் அட்டைகள் படகுடன் பறிமுதல் செய்யப்பட்டன. இதை இலங்கைக்கு கடத்த முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாம்பன் குந்துகால் கடற்கரையில் 22 மூடை மஞ்சள், கடல் அட்டைகள் பறிமுதல் - இலங்கைக்கு கடத்த முயன்ற 3 பேர் கைது
Published on

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் வழியாக இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்படுவதாக கடலோர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும ஏ.டி.ஜி.பி. வன்னியபெருமாள் உத்தரவின் பேரில் மண்டபம் கடலோர காவல் நிலைய போலீசார் சந்தோஷ், காளிமுத்து உள்ளிட்டோர் பாம்பன் குந்துகால் கடற்கரை பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது கடற்கரையில் நின்று கொண்டிருந்த பைபர் படகு ஒன்றை சோதனை செய்தபோது அதில் ஏராளமான மூடைகள் இருந்தது தெரிய வந்தது.

அந்த மூடைகளை பிரித்து பார்த்தபோது அதில் மஞ்சள் மற்றும் அரிய உயிரினமான கடல் அட்டையை பதப்படுத்தி வைத்திருப்பதை கடலோர போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து படகு மற்றும் படகில் இருந்த 22 மூடைகளில் இருந்த மஞ்சள் மற்றும் கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். படகில் வந்திருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த 3 பேரையும் கைது செய்து, மண்டபம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த ரெடி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் தூத்துக்குடி லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்த மலையாண்டி (வயது 46), ஜெயக்குமார்(48), அதே பகுதியை சேர்ந்த பாலட்டின் (63) ஆகிய 3 பேரும் சேர்ந்து தூத்துக்குடியில் இருந்து பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் மஞ்சள் அடங்கிய 22 மூடைகளை படகில் ஏற்றி, மன்னார்வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது.

திடீரென படகின் என்ஜினில் பழுது ஏற்பட்டதால் சரி செய்வதற்காக பாம்பன் குந்துகால் கடற்கரையில் படகை நிறுத்தி உள்ளனர். அப்போதுதான் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். பாம்பனில் பிடிபட்டுள்ள மஞ்சள் மற்றும் கடல் அட்டைகளை சர்வதேச கடல் பகுதிக்கு கொண்டு சென்று, இலங்கையில் இருந்துவரும் கடத்தல்காரர்களிடம் இந்த பொருட்களை கொடுத்து அவர்களிடம் தங்க கட்டிகளை வாங்கி வர திட்டமிட்டு இருந்தனரா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com