நகைக்காக தாக்கப்பட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி சாவு - வாலிபர் மீது கொலை வழக்குப்பதிவு

திருவெண்காட்டில் நகைக்காக தாக்கப்பட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட வாலிபர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நகைக்காக தாக்கப்பட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி சாவு - வாலிபர் மீது கொலை வழக்குப்பதிவு
Published on

திருவெண்காடு,

நாகை மாவட்டம், திருவெண்காடு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சரோஜா (வயது 80). இவர், அவரது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த சவுந்தரராஜன் மகன் ராமதாஸ் (31). சம்பவத்தன்று சரோஜாவின் வீட்டிற்குள் நுழைந்த ராமதாஸ் மூதாட்டியின் வாயில் துணியை வைத்து அடைத்து, அவரை தாக்கி, அவர் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்து சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து காயம் அடைந்த சரோஜாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து திருவெண்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமதாசை கைது செய்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி சரோஜா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார், கைது செய்யப்பட்ட ராமதாஸ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com