தஞ்சையில் இருந்து நாமக்கல்லுக்கு கடத்த முயற்சி: 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 8 பேரிடம் விசாரணை

தஞ்சை மாவட்டத்தில் சேகரிக்கப்பட்டு நாமக்கல் மாவட்டத்துக்கு கடத்தப்பட இருந்த ஏறத்தாழ 15 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த் துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.
தஞ்சையில் இருந்து நாமக்கல்லுக்கு கடத்த முயற்சி: 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 8 பேரிடம் விசாரணை
Published on

தஞ்சாவூர்,

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரிசியை சிலர் கடத்திச் சென்று பாலிஷ் செய்து கூடுதல் விலைக்கு அரிசியாகவும், சிலர் கோழி தீவனங்களாகவும்பயன்படுத்தி வருவதாக தஞ்சை வருவாய் துறையினருக்கு பல்வேறு புகார்கள் வருகின்றன.

இந்த நிலையில் தஞ்சை அருகே மாதாக்கோட்டை புறவழிச்சாலையில் உள்ள கொட்டகையில் இருந்து நாமக்கல் மாவட்டத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் வந்தது.

அதன் பேரில் தஞ்சை தாசில்தார் மணிகண்டன், வட்ட வழங்கல் அலுவலர் சமத்துவராஜ், மண்டலத் துணை தாசில்தார் செந்தில் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, ஒரு லாரி, 3 மினி வேன்களில் ரேஷன் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டது தெரியவந்தது. உடனே லாரி, மினிவேன்களையும், ரேஷன் அரிசி மூட்டைகளை அலுவலர்கள் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில், நீண்ட நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட ரேஷன் அரிசியை அரவை ஆலைகளில் குருணையாக அரைத்து, மாதாக்கோட்டை புறவழிச்சாலையில் உள்ள திறந்தவெளியில் அமைக்கப்பட்டுள்ள கொட்டகைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதும், இங்கு மூட்டைகளில் நிரப்பி நாமக்கல் மாவட்டத்துக்குக் கோழி தீவனத்துக்காக அனுப்பப்படுவதும் தெரிய வந்தது.

மேலும், நேற்று இரவு லாரியிலும், மினி வேன்களிலும் ஏறத்தாழ 300 மூட்டைகள் ஏற்றப்படுவதும், இவற்றில் சுமார் 15 டன் ரேஷன் அரிசி இருப்பதும் தெரிய வந்தது. இவற்றை உணவுபொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸ் பிரிவினரிடம் வருவாய்த் துறையினர் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக சம்பவ இடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 8 கூலித் தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த அரிசி எந்தந்த ரேஷன் கடைகளில் இருந்து கடத்தி வரப்பட்டது என்றும் அல்லது பொது மக்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கப்பட்டதா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com