

வேலூர்
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ தொழிலாளர் சங்கம் மற்றும் அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஆட்டோ சங்க மாவட்ட பொது செயலாளர் எஸ்.ஏ.சிம்புதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கே.லோகேஷ்குமார் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர்.தேவதாஸ், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் ஏ.எஸ்.சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். வாகன பதிவு சான்றிதழ், வாகன தகுதி சான்றிதழ், வாகன புதுப்பிப்பு சான்றிதழ் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். யாரோ ஒருவர் குற்றச்செயலில் ஈடுபட்டதாக கூறி ஒட்டுமொத்த ஆட்டோ தொழிலாளர்களை குற்றவாளிகளாக சித்தரிப்பதை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் ஆட்டோ தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.