பேனர் வைத்தால் தானாகவே அபராதம் விதிக்கும் முறை விரைவில் அமலாகிறது

பேனர், கட் அவுட் வைத்தால் தானாகவே அபராதம் விதிக்கும்முறையை அமல்படுத்த புதுவை அரசு ஆலோசித்து வருகிறது.
பேனர் வைத்தால் தானாகவே அபராதம் விதிக்கும் முறை விரைவில் அமலாகிறது
Published on

புதுச்சேரி

பேனர், கட் அவுட் வைத்தால் தானாகவே அபராதம் விதிக்கும்முறையை அமல்படுத்த புதுவை அரசு ஆலோசித்து வருகிறது.

பேனர், கட்-அவுட் கலாசாரம்

அனுமதியின்றி கட் அவுட் வைப்பவர்கள், சாலையை தோண்டுபவர்களுக்கு தானாக அபராதம் விதிக்கும் முறையை அமல்படுத்த புதுவை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதுவையில் கட் அவுட் கலாசாரம் அதிகரித்து வருகிறது. உரிய அனுமதியின்றி சாலையை அடைத்து பேனர், கட்-அவுட் வைப்பது, விளம்பர பலகைகள் அமைப்பது நாள்தோறும் பெருகிறது. இதற்காக தார் சாலையை அனுமதியின்றி தோண்டி சேதப்படுத்துவதும் அதிகரித்துள்ளது.

அபராதம் விதிக்க...

அரசியல்வாதிகள் பிறந்தநாள் விழா, சாதரணமாக நடக்கும் காது குத்து விழா, ரியல் எஸ்டேட் நிறுவனத்தினரின் பதாகை, கடை திறப்பு உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் இவ்வாறு கட்-அவுட் வைப்பது வாடிக்கையாகி விட்டது. இதுதொடர்பாக அரசு பலமுறை எச்சரிக்கை விடுத்தும் யாரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை.

எனவே, இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்க புதுவை அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தேசிய தகவல் மையம் மூலம் ஒரு செயலியையும் உருவாக்க உள்ளது.

செயலியில் பதிவு

அதாவது பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறையில் ஆய்வுக்கு செல்லும் ஊழியர்கள் இதுபோன்ற செயல்படுபவர்கள் குறித்த விவரங்களை ஆதாரத்துடன் சேகரித்து அந்த செயலியில் பதிவிட வேண்டும். அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சம்பந்தப்பட்ட துறையானது அபராதத்தை விதித்து நோட்டீசு அனுப்பும்.

அந்த அபராதத்தை சம்பந்தபட்டவர்கள் செலுத்தியே ஆகவேண்டும். இதன்மூலம் அரசுக்கு வருமானம் கிடைப்பதுடன் முறையற்ற வகையில் திறந்தவெளியில் விளம்பரங்கள் செய்வது தவிர்க்கப்படும் என்றும் அரசு கருதுகிறது. குறிப்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பேனர் கலாசாரத்தை கண்டு கொள்வதில்லை. எனவே, இந்த பணியில் ஒவ்வொரு துறையிலும் குறிப்பிட்ட ஊழியர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com