

மின்சார இருசக்கர வாகனங்களில் லித்தியம் பேட்டரிக்கு பதிலாக சோடியம் அயன் பேட்டரியை பயன்படுத்தி சோதனை நடத்த சரோகி இ-வென்ச்சர்ஸ் நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.
கொல்கத்தாவைச் சேர்ந்த சரோகி இ-வென்ச்சர்ஸ் நிறுவனம், 'இ-வென்ட்' என்ற பெயரில் மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்திய சந்தைகளில், குறிப்பாக ரூ.1 லட்சத்திற்கும் குறைவான இரு சக்கர வாகனங்கள் விற்பனையில், குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இருப்பதாக அந்நிறுவனம் கருதுகிறது. அதனால் அத்தகைய வாகன விற்பனையை அதிகரிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அதே நேரத்தில், வழக்கமான லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கு மாற்றாக சோடியம்-அயன் பேட்டரி தொழில்நுட்பத்தையும் ஆராய்ந்து வருவதாக அதன் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி உமாங் குமார் சரோகி கூறினார்.
சோடியம்-அயன் பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டர்களின் சோதனைகளை டிசம்பர் மாதவாக்கில் தொடங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக சில வாகனங்களை சோதனைக்கு உட்படுத்த உள்ளது. வழக்கமான லித்தியம்-அயன் பேட்டரிகளைவிட இந்தத் தொழில்நுட்பம் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
இதுபற்றி உமாங் குமார் சரோகி கூறியதாவது:
சோடியம்-அயன் பேட்டரி மிகவும் பாதுகாப்பானது என்று கருதப்படுகிறது. டிசம்பர் மாதம் முதல் இங்கு சோதனைகளை நடத்தி, இந்த பேட்டரிகள் பொருத்தப்பட்ட சில வாகனங்களைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். எங்களின் புதிய தயாரிப்பு அறிமுகங்களில் இவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு, இதன் சிக்கனத்தன்மை மற்றும் வசதிகள் ஆகியவற்றை மதிப்பீடு செய்ய வேண்டும். தற்போது, பெரும்பாலான மாடல்கள் லித்தியம்-அயன் தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகின்றன.
சோடியம்-அயன் பேட்டரிகள் வெற்றிகரமாக வணிகமயமாக்கப்பட்டால், அவை உள்நாட்டில் ஏராளமாகக் கிடைக்கும் மூலப்பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம், பேட்டரிகளை உள்நாட்டிலேயே உருவாக்கும் இந்தியாவின் முயற்சியை விரைவுபடுத்தும். மேலும், இறக்குமதி செய்யப்படும் லித்தியம்-அயன் பேட்டரி உதிரிபாகங்களை சார்ந்திருப்பதை குறைக்க முடியும்.
தேசிய பிராண்டுகள் பெரும்பாலும் பிரீமியம் மாடல்களில் கவனம் செலுத்துவதால், ரூ.1 லட்சத்திற்கும் குறைவான விலைப்பிரிவு மாடல்களை தயாரிக்கும் பிராந்திய மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளர்களுக்கு கணிசமான வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளன.
மாதம் ரூ.30,000 முதல் 50,000 வரை சம்பாதிப்பவர்களுக்கு, அதிக விலை கொண்ட மின்சார ஸ்கூட்டர் பெரும்பாலும் பரிசீலனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். அவர்கள், ரூ.1 லட்சம் பட்ஜெட்டிற்குள் பொருந்தக்கூடிய, நம்பகமான ஒரு பயணத் தீர்வைத் தேடுகிறார்கள். அத்துடன் வாகனத்தின் வாழ்நாள் முழுவதும் குறைந்தபட்ச பராமரிப்புச் செலவையே விரும்புகிறார்கள்.
மின்சார வாகனப் பயன்பாடு என்பது விலையுயர்ந்த தொழில்நுட்பத்தை வாங்கக்கூடியவர்களுக்கு மட்டுமல்ல, புத்திசாலித்தனமான ஒரு தேர்வை மேற்கொள்ள விரும்பும் ஒவ்வொரு இந்தியருக்கும் உரியதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.