புதிய மாற்றங்களுடன் ஹோண்டா எலிவேட்

ஹோண்டா சின்னம் பானெட்டின் முன்பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
புதிய மாற்றங்களுடன் ஹோண்டா எலிவேட்
Published on: 

புதுடெல்லி,

2023-ம் ஆண்டில் அறிமுகமான ஹோண்டா எலிவேட் எஸ்.யூ.வி.யின் புதுப்பிக்கப்பட்ட மாடல் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. ரூ.11.80 லட்சம் முதல் ரூ.18.40 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்தக் காரில், தோற்றம், வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஹோண்டா சின்னம்

முன்புறத்தில் ஹெட்லைட்டுகளை இணைக்கும் புதிய எல்.இ.டி. பகல்நேர விளக்குப் பட்டையும் (டி.ஆர்.எல்.), பளபளப்பான கருப்பு நிற கிரில்லும் இடம்பெற்றுள்ளன. ஹோண்டா சின்னம் பானெட்டின் முன்பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

பின்புறத்தில் டெயில் லேம்புகளை இணைக்கும் எல்.இ.டி. விளக்குப் பட்டையும், காரைச் சுற்றி பளபளப்பான கருப்பு நிறப் பாதுகாப்புப் பட்டைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. புதிதாக நார்டிக் பாரஸ்ட் பேர்ல் நிறத்திலும் கிடைக்கிறது. மற்றபடி, அடிப்படை வடிவமைப்பிலும் அலாய் சக்கரங்களிலும் பெரிய மாற்றமில்லை.

மூட் லைட்

உட்புறத்தில் மரம் போன்ற அலங்காரத்துக்குப் பதிலாக வெள்ளை நிற லெதரெட் மேற்பரப்பும், தையல் வேலைப்பாடுகளும் இடம்பெற்றுள்ளன. உயர்வகை மாடல்களில், மூட் லைட் எனப்படும் சுற்றுப்புற விளக்குகளும் வழங்கப்படுகின்றன.

முன்புற இருக்கைகள் நவீன காலத்திற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு, எலெக்ட்ரிக் அட்ஜெஸ் மெண்டுடன் வருகிறது. கூடுதலாக முன்புற இருக்கைகளில் குளிரூட்டும் வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல. இந்த புதுப்பிக்கப்பட்ட மாடலில் பின்புற இருக்கைகளுக்கும் பிரத்யேக ஏ.சி. வெண்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆறு ஏர்பேக்குகள்

புதிய 360 டிகிரி கேமரா, முன்புற பார்க்கிங் சென்சார்கள், பின்புற டிஸ்க் பிரேக்குகள் ஆகிய வற்றுடன், 10.25 அங்குல தொடுதிரை, சன்ரூப். வயர்லெஸ் சார்ஜர், ஸ்மார்ட்போன் இணைப்பு, ஆறு ஏர்பேக்குகள் ஆகிய வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

சிவிடி மாடல்களில் ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்கும். குறைந்த வேகத்திலும் செயல்படும் அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோலும் கிடைக்கின்றன. கேபினுக்குள் சத்தம் குறைய கூடுதல் ஒலித்தடுப்புப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.

ஐந்து வேரியண்ட்

என்ஜினில் மாற்றமில்லை. 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 121 குதிரைத்திறனையும், 145 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வழங்குகிறது. இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வு செய்யலாம்.

மேனுவல் மாடல் லிட்டருக்கு 15.31 கி.மீ., சிவிடி மாடல் 16.61 கி.மீ. மைலேஜ் தரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹோண்டா சிட்டியில் உள்ள ஸ்ட்ராங் ஹைபிரிட் என்ஜின் இதில் இடம்பெறவில்லை. புதிய எலிவேட் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com