இந்தியாவில் ரூ.1.4 லட்சம் கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்.. வேலைவாய்ப்பு அதிகரிக்கும்

புதிய முதலீட்டுத் திட்டத்தின் மூலம், உற்பத்தி, பொறியியல் மற்றும் விநியோகச் சங்கிலி ஆகிய துறைகளில் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பிரதமர் மோடி-ஹூண்டாய் மோட்டார் நிர்வாகத் தலைவர் உய்சன் சுங் சந்திப்பு
பிரதமர் மோடி-ஹூண்டாய் மோட்டார் நிர்வாகத் தலைவர் உய்சன் சுங் சந்திப்பு
Published on: 

உலகின் மூன்றாவது பெரிய வாகனச் சந்தையான இந்தியாவில், தென் கொரிய வாகனப் பெருநிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் தனது முதலீட்டை அதிகரித்துள்ளது. அதாவது, 2026 முதல் 2032-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் 15.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய ரூபாய் மதிப்பில் 1.4 லட்சம் கோடி) முதலீடு செய்யப்போவதாக ஹூண்டாய் மோட்டார் குழுமம் அறிவித்துள்ளது.

தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், தனது நீண்டகால உலகளாவிய வளர்ச்சித் திட்டங்களில் இந்தியாவுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை இந்த முதலீட்டின் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறது

டெல்லியில் நேற்று முன்தினம் ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் நிர்வாகத் தலைவர் உய்சன் சுங், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. இந்த முதலீடானது உற்பத்தி விரிவாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, விநியோகச் சங்கிலி சூழல் அமைப்பின் வளர்ச்சி மற்றும் எதிர்கால போக்குவரத்துத் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரத்யேக முதலீட்டு அமைப்பு

உலகளவில் வளர்ந்து வரும் சந்தைகளில் அதன் எதிர்கால வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கு இந்தியா ஒரு முக்கிய சந்தையாக விளங்கும் என ஹூண்டாய் மோட்டார் குழுமம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. இப்போது அறிவித்துள்ள முதலீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த, ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் ஒரு பிரத்யேக முதலீட்டு அமைப்பை நிறுவ திட்டமிட்டுள்ளது. இந்த அமைப்பானது முதலீடுகள், கூட்டாண்மைகள் மற்றும் விநியோகஸ்தர் மேம்பாட்டு முயற்சிகளை மேற்பார்வையிடும்.

இந்தியாவில் ஹூண்டாய் மோட்டார் குழுமம் 15.5 பில்லியன் டாலர் முதலீடு செய்கிறது
ஹூண்டாய் வாகனங்கள்

உற்பத்தி அதிகரிக்கும்

இந்த முதலீடு குறித்து ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் நிர்வாகத் தலைவர் யூசுன் சுங் கூறுகையில், "உலகளவில் ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் மிக முக்கியமான மற்றும் முன்னணி சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவுடனான வணிகம் எங்களை வரையறுத்துள்ளது. தற்போதைய முதலீடு, அடுத்த 30 ஆண்டுகளுக்கும், அதற்குப் பிறகும் இந்தியாவுக்கான வர்த்தக அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த முதலீட்டின் மூலம், நாங்கள் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். மேலும் இந்தியாவின் தொடர்ச்சியான தொழில்துறை வளர்ச்சிக்கு ஆதரவளிக்க எங்கள் கூட்டாளிகள் மற்றும் பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றுவோம்" என்றார்.

இந்த முதலீட்டின் கணிசமான பகுதி, ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் மற்றும் கியா இந்தியா ஆலைகளில் உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவதற்காக பயன்படுத்தப்படும். இது எதிர்கால விற்பனை வளர்ச்சிக்கு உதவுவதுடன், உள்நாட்டுமயமாக்கலை அதிகரித்து, ஏற்றுமதி மையமாக இந்தியாவின் பங்கை வலுப்படுத்தவும் உதவும் என்று ஹூண்டாய் மோட்டார் குழுமம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 24 ஆயிரம் பணியாளர்கள்

இந்தியாவில் உள்ள ஹூண்டாய் மோட்டார் குழும நிறுவனங்களில் 24,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் புனே மற்றும் சென்னையில் ஆலைகளையும், கியா நிறுவனம் அனந்தபூரில் ஆலையையும் இயக்கி வருகிறது. இந்த ஆலைகள் ஆண்டுக்கு 14 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை ஆகும். இந்த புதிய முதலீட்டுத் திட்டத்தின் மூலம், உற்பத்தி, பொறியியல் மற்றும் விநியோகச் சங்கிலி ஆகிய துறைகளில் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் இந்த அறிவிப்பானது, இந்தியாவில் ஒரு சர்வதேச வாகன உற்பத்தி நிறுவனம் செய்யும் மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாகும். மேலும், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் வாகனச் சந்தைகளில் ஒன்றான இந்தியாவில், தனது இருப்பை மேலும் வலுப்படுத்த ஹூண்டாய் கொண்டுள்ள நோக்கத்தை இது வெளிப்படுத்துகிறது. அதே வேளையில், உலகளாவிய ஏற்றுமதிக்கான உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மையமாக இந்தியாவை மேம்படுத்தவும் இது உதவும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com