இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகம் ஆகிறது ‘ரேஞ்ச் ரோவர் மின்சார கார்’

இந்த சொகுசு கார்களின் விலை தோராயமாக ரூ.2.50 கோடி முதல் ரூ.4.50 கோடிக்குள் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என தெரிகிறது.
ரேஞ்ச் ரோவர் மின்சார கார் மாடல்கள்
ரேஞ்ச் ரோவர் மின்சார கார் மாடல்கள்
Published on: 

பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர், வளர்ந்து வரும் முக்கிய சந்தையான இந்தியாவில் அடுத்த ஆண்டு மின்சார கார்களை அறிமுகம் செய்ய உள்ளது.

இந்நிறுவனத்தின் 'ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் மற்றும் 'ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எலக்ட்ரிக்' ஆகிய பிரீமியம் மாடல்கள் முதலில் விற்பனைக்கு வரவுள்ளன. முதற்கட்டமாக இந்த சொகுசு கார்கள் முழுமையாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். இந்திய வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பொறுத்து, இங்கேயே காரை அசெம்பிள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவை வளர்ந்து வரும் ஒரு முக்கிய சந்தையாகக் கருதும் ஜாகுவார் லேண்ட் ரோவர், பிரீமியம் மின்சார வாகனப் பிரிவில் உருவாகி வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில், மின்சார வாகனங்களை 2027-ல் இங்கு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக, ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ராஜன் அம்பா தெரிவித்தார். அடுத்த ஆண்டு புதிய ஜாகுவார் ஜிடி வாகனம் அறிமுகம் செய்யப்படும் என்றும், இந்த வாகனங்கள் அறிமுகம் வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறவுள்ளதாகவும் கூறினார்.

மின்சார வாகனங்களே எதிர்காலத்திற்கான வழி, என்று கூறிய அவர், இந்திய மின்சார வாகனச் சந்தையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் நுழைவதற்கு இதுவே சரியான தருணம் என்றும் குறிப்பிட்டார்.

இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் (FTA) தாக்கம் குறித்துப் பேசிய ராஜன் அம்பா, சில வாகன மாடல்களின் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது என்றார்.

விலை திருத்தம் செய்யப்ப்டடபிறகு, ஒரு குறிப்பிட்ட வாகனத்தின் விலை சுமார் ரூ. 4.25 கோடியிலிருந்து ரூ.3.5 கோடியாகக் குறைந்ததை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார்.

இருப்பினும், திருத்தப்பட்ட விலைகள் அமலுக்கு வந்து சில மாதங்களே ஆகியிருப்பதால், இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் முழுமையான தாக்கத்தை மதிப்பிடுவதற்கு இன்னும் சிலகாலம் ஆகும் என்றார்.

ரேஞ்ச் ரோவர் மின்சார கார்
ரேஞ்ச் ரோவர் மின்சார கார்

இந்த சொகுசு கார்களுக்கான முன்பதிவு கடந்த செப்டம்பர் மாதம் 2-ம் தேதி தொடங்கியது. 10 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த உயர் ரக எஸ்யூவி-யை முன்பதிவு செய்யலாம். இந்த கார்களின் விலை தோராயமாக ரூ.2.50 கோடி முதல் ரூ.4.50 கோடிக்குள் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என தெரிகிறது. அதிகாரப்பூர்வ விலை, சந்தையில் அறிமுகம் செய்யப்படும் நேரத்தில் அறிவிக்கப்படும்.

இந்த கார்கள் சந்தையில் அறிமுகம் ஆகும்போது லம்போர்கினி யூரஸ், மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்6 ஆகியவற்றுக்குப் போட்டியாக அமையும்.

X