மாருதி சுஸுகி இன்விக்டோ


மாருதி சுஸுகி இன்விக்டோ
x

இந்தியாவில் கார் தயாரிப்பில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனம் புதிய மாடலாக இன்விக்டோ காரை அறிமுகம் செய்துள்ளது. பிரீமியம் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தக் காரின் ஆரம்ப விலை சுமார் ரூ.24.79 லட்சம். இதில் உயர் பிரிவு மாடலின் விலை சுமார் ரூ.28.42 லட்சம். மாருதி விற்பனையகங்களில் உயர் பிரிவு கார்களை விற்பனை செய்யும் நெக்சா விற்பனையகத்தின் மூலம் இந்தக் காரை விற்பனை செய்யப்போவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்விக்டோ மாடலில் ஜெட்டா பிளஸ் மற்றும் ஆல்பா பிளஸ் என்ற இரண்டு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் 7 பேர் மற்றும் 8 பேர் பயணிக்கும் மாடல்கள் உள்ளதால் வாடிக்கையாளர்கள் தங்களது தேவைக்கேற்ற மாடலைத் தேர்வு செய்து கொள்ளலாம். முன்புற கிரில், பம்பர், அலாய் சக்கரம் ஆகியவை முற்றிலும் மாறுபட்ட வடிவில் உள்ளன.

இரட்டை முகப்பு எல்.இ.டி. விளக்கு, பகலில் ஒளிரும் விளக்கு, பின்புறத்தில் எல்.இ.டி. விளக்குகள் காருக்கு அழகிய தோற்றத்தை அளிக்கிறது. 17 அங்குல பிரிசிஷன் கட் அலாய் சக்கரம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 10.1 அங்குல தொடுதிரை இன்போடெயின் மென்ட் சிஸ்டம், 7 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பின்பக்க கதவுகளில் சன்-ஷேட், மேற்கூரை ஆகியன இந்தக் காரின் சிறப்பு அம்சங்களாகும். பாதுகாப்பை உறுதிப்படுத்த 6 ஏர் பேக்குகள் உள்ளன. டிஸ்க் பிரேக், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஏ.பி.எஸ்., இ.பி.டி., வெஹிக்கிள் ஸ்டெபிளிடி கண்ட்ரோல், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டுள்ளது.

குழந்தைகள் பயணிப்பதற்கேற்ற ஐ-சோபிக்ஸ் உள்ளது. இந்தக் காரில் 2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இருப்பதால், இது 184 ஹெச்.பி. திறனையும், 206 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது. நான்கு விதமான ஓட்டும் நிலைகளை (இ.வி., நார்மல், எகோ மற்றும் பவர்) கொண்டது. சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 23.24 கி.மீ. தூரம் ஓடியதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Next Story