ரசாயனப் பொருட்களை தவிர்ப்போம் - நீலிமா

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு, என்னுடைய தயாரிப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறேன். வருங்காலத்தில் இந்தியா முழுவதும் எனது தயாரிப்புகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே என்னுடைய லட்சியமாகும்.
ரசாயனப் பொருட்களை தவிர்ப்போம் - நீலிமா
Published on

ணவர், குழந்தைகள், குடும்ப பொறுப்புகள் என்று சுழன்று கொண்டிருக்கும் பல பெண்கள், 40 வயதுக்கு மேல் அதிகமாக தனிமையை உணர்கிறார்கள். அந்த சலிப்பை போக்குவதற்காக சில பெண்கள், தொலைக்காட்சி சீரியல்களில் மூழ்கிவிடுவது உண்டு. ஆனால் ஒருசில பெண்கள் வித்தியாசமாக யோசித்து, தங்களுடைய திறமையை வெளிக்கொண்டு வந்து வெற்றி பெறுகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த நீலிமா. அவருடன் ஒரு சந்திப்பு.

''நான் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறேன். என்னுடைய கணவர் இளமாறன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எங்களுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

கணவருடைய பணியின் நிமித்தமாக தற்போது காரைக்காலில் வசித்து வருகிறோம். என்னுடைய 49-வது வயதில் தனிமையையும், வெறுமையையும் உணர்ந்தேன். அதன் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளானேன். அதில் இருந்து மீள்வதற்காக எனது கவனத்தை திசைத்திருப்ப முயற்சித்தேன்.

அந்த சமயத்தில்தான், இயற்கை மூலிகைகள் மற்றும் எண்ணெய்கள் பற்றி தேடித்தேடி கற்றுக் கொண்டேன். அதன்மூலம் ரசாயனம் கலக்காத கூந்தல் தைலம், ஷாம்பு, ஹேர்பேக், பேஸ்பேக், சருமப் பொலிவை அதிகரிக்கும் திரவம் போன்றவற்றை வீட்டிலேயே தயாரிக்கிறேன்.

தொடக்கத்தில் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய தயாரிப்புகளை கொடுத்தேன். அவர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு அவற்றை சந்தைப்படுத்தும் விதமாக என்னுடைய நிறுவனத்தை ஆரம்பித்தேன்.

ஒரே ஒரு தயாரிப்போடு தொடங்கிய எனது நிறுவனத்தில், தற்போது 27 வகையான அழகு பராமரிப்பு பொருட்களை தயாரிக்கிறோம். கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த துறையில் வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறேன்'' என்கிறார்.

இத்தனை வருடத்தில் நீங்கள் சந்தித்த சவால்கள் என்னென்ன?

ஆரம்பத்தில் எனது தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு கொரியர் மூலம் அனுப்புவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டன. திரவப் பொருட்களை கொண்டு செல்வதற்கு கொரியர் நிறுவனம் அனுமதிக்கவில்லை. அவர்களிடம் எனது பேக்கிங்கை காட்டி சிறப்பு அனுமதி பெற்றேன். அதன் பிறகே என்னால் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப முடிந்தது.

சில நேரங்களில் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் ஆர்டர் செய்த பொருட்கள் போய் சேராமல் இருந்தது. அத்தகைய சமயங்களில் அவர்களுக்கு மீண்டும் பொருட்களை அனுப்பி வைத்து சமாளித்தேன். நான் நஷ்டம் அடைந்தாலும், வாடிக்கையாளரிடம் அவப்பெயர் எடுக்காமல் கவனமாக பார்த்துக் கொண்டேன்.

கொரோனா காலத்தில் தற்காலிகமாக தயாரிப்பு பணிகளை நிறுத்தி வைத்தேன். நிலைமை சீரானதும் மீண்டும் அழகு பராமரிப்பு பொருட்கள் தயாரிப்பை தொடங்கினேன். இவ்வாறு அவ்வப்போது எழும் சவால்களை பொறுமையோடு எதிர்கொண்டு வருகிறேன்.

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு, என்னுடைய தயாரிப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறேன். வருங்காலத்தில் இந்தியா முழுவதும் எனது தயாரிப்புகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே என்னுடைய லட்சியமாகும்.

நிறுவனம் தவிர உங்களுடைய மற்ற செயல்பாடுகள் என்ன?

தோட்டக்கலையின் மீது எனக்கு ஆர்வம் உண்டு. வலைப்பதிவுகளையும் எழுதி வருகிறேன். ரசாயனம் கலக்காத பொருட்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறேன்.

முழுவதும் இயற்கையான மூலப் பொருட்களை மட்டுமே என்னுடைய தயாரிப்புகளுக்கு பயன்படுத்துவதை பாராட்டும் விதமாக ஆஸ்பயரிங் ஆண்டிபிரீனியர் விருது மற்றும் சிறந்த ஹோம்பிரீனியர் விருது பெற்றிருக்கிறேன்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com