

தேனி,
தேனி மாவட்டம், தேவாரம் அருகே பொட்டிப்புரத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்து உள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்தை தொடங்குவதற்கு மத்திய அரசு மீண்டும் முயற்சி செய்து வருகிறது.
இதற்கு தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்குமாறு, மத்திய அரசு கேட்டுள்ளது. இதையடுத்து நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள், இழப்புகள் குறித்து நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம் சார்பில் மக்கள் விழிப்புணர்வு கூட்டங்கள் தேனி மாவட்டத்தில் நேற்று நடந்தது.
சின்னமனூரில், நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க எதிர்ப்பு பிரசாரம் தொடங்கியது. தொடர்ந்து உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், பொட்டிப்புரம் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் பிரசாரம் நடந்தது. இறுதியில் போடியில் பிரசாரம் நிறைவு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் வைகோ பேசும் போது கூறியதாவது:-
நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக தமிழக அரசுக்கு உள்துறை செயலாளர் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆய்வுக்கூடம் அமைக்க பாறைகளை துளையிடும் போது, சுற்றுச்சூழல் மாசுபடும். விவசாயம் பாதிக்கப்படும். நில அதிர்வு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த திட்டத்தை நிரந்தரமாக தமிழகத்தில் இருந்து அகற்ற ஒட்டுமொத்த மக்களும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும். மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தால் தான் வெற்றி பெற முடியும். இதற்காக தான் இங்கே பல்வேறு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு பிரசாரம் நடத்தி வருகிறோம்.
இவ்வாறு வைகோ பேசினார்.