மோசடி வழக்கில் ஜாமீன்: திண்டுக்கல் கோர்ட்டில் நத்தம் விசுவநாதன் ஆஜர்

ரூ.3 கோடி மோசடி வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து, திண்டுக்கல் கோர்ட்டில் நத்தம் விசுவநாதன் ஆஜர் ஆனார்.
மோசடி வழக்கில் ஜாமீன்: திண்டுக்கல் கோர்ட்டில் நத்தம் விசுவநாதன் ஆஜர்
Published on

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே உள்ள என்.பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்தவர் சபாபதி. மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், என்னிடம் பல்வேறு தவணைகளில் ரூ.4 கோடியே 97 லட்சத்து 90 ஆயிரத்து 700 கடன் வாங்கி இருந்தார். அதன்பிறகு, ரூ.2 கோடியை திரும்ப கொடுத்துவிட்டார். ஆனால், மீதம் உள்ள தொகையை தராமல் மோசடி செய்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு மீது விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதன்பேரில், திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே, மதுரை ஐகோர்ட்டு கிளையில் நத்தம் விசுவநாதன் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, மறுஉத்தரவு வரும் வரை திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், திண்டுக்கல் 2வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு பாலமுருகன் முன்னிலையில் நத்தம் விசுவநாதன் நேற்று ஆஜர் ஆனார். பிறகு, ஐகோர்ட்டு உத்தரவை கோர்ட்டில் தாக்கல் செய்த அவர், தனது சார்பில் ஜாமீன்தாரர்களையும் ஆஜர்படுத்தினார். இதைத்தொடர்ந்து, ஐகோர்ட்டு உத்தரவை கடைபிடித்து, திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட நத்தம் விசுவநாதனுக்கு மாஜிஸ்திரேட்டு அறிவுறுத்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com