பெங்களூரு மாநகராட்சி தேர்தல் தள்ளிபோகிறது; பரபரப்பு தகவல்கள்

வார்டு மறுவரையறை அறிக்கை வெளியிடுவதில் தாமதம் ஆவதால் பெங்களூரு மாநகராட்சி தேர்தல் தள்ளிபோகிறது.
பெங்களூரு மாநகராட்சி தேர்தல் தள்ளிபோகிறது; பரபரப்பு தகவல்கள்
Published on

பெங்களூரு:

ஒருவாரம் ஆகிவிட்டது

பெங்களூரு மாநகராட்சியில் தற்போது 198 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளின் எண்ணிக்கையை 243 ஆக உயர்த்த அரசு முடிவு செய்தது. அதன்படி வார்டு மறுவரையறை குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, வார்டு மறுவரையறை பணிகளை நிறைவு செய்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த மே மாதம் 21-ந் தேதி, பெங்களூரு மாநகராட்சி வார்டு மறுவரையறை பணிகளை 8 வாரங்களுக்குள் முடித்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்றும், அதன் பிறகு தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதற்கிடையே வார்டு மறுவரையறை குறித்த அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு ஒரு வாரம் ஆகிவிட்டது. இதுவரை அந்த அறிக்கைக்கு அரசு ஒப்புதல் வழங்கவில்லை. அந்த அறிக்கையை வெளியிட்டு அதற்கு பொதுமக்கள் ஆட்சேபனைகளை தெரிவிக்க உரிய காலஅவகாசம் வழங்க வேண்டும். ஆனால் அந்த அறிக்கையை அரசாணையாக பிறப்பிக்க அரசு காலதாமதம் செய்து வருகிறது.

தேர்தல் நடைபெறாது

பெங்களூருவில் உள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி தேர்தல் தற்போது நடைபெறுவதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பிறகே மாநகராட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று முதல்-மந்திரியிடம் அவர்கள் எடுத்து கூறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு சட்டசபை தொகுதியில் இருக்கும் வாக்காளர்களின் பெயர் அதே சட்டசபையில் உள்ள வார்டுகளில் தான் இடம் பெற வேண்டும். ஆனால் புதிய மறுவரையறை அறிக்கையில் ஒரு சட்டசபையில் உள்ள வாக்காளர்களின் பெயர் அருகில் உள்ள சட்டசபை தொகுதி வார்டுகளில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதையே காரணமாக வைத்து சுப்ரீம் கோர்ட்டில் எடுத்து கூறி மாநகராட்சி தேர்தலை தள்ளிப்போட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு ஆலோசனை கூறுவதாக சொல்லப்படுகிறது. எம்.எல்.ஏ.க்களின்இந்த கருத்தை முற்றிலுமாக புறந்தள்ள பசவராஜ் பொம்மை விரும்பவில்லை என்று தெரிகிறது. அதனால் பெங்களூரு மாநகராட்சிக்கு தற்போதைக்கு தேர்தல் நடைபெறாது என்று கூறப்படுகிறது. சட்டசபைக்கு தேர்தலுக்கு பின்னரே மாநகராட்சி தேர்தலை நடத்த பா.ஜனதா அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com