வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

காரைக்காலில் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
Published on

காரைக்கால்

காரைக்காலில் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தனியார் வங்கி ஏ.டி.எம்.

காரைக்கால் பாரதியார் வீதியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இன்று இந்த மையத்தில் யாரும் இல்லாத நேரத்தில் மர்மநபர் ஒருவர் உள்ளே சென்றார். அவர் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை இரும்பு கம்பியால் அடித்து நொறுக்கி, திறக்க முயற்சி செய்தார்.

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் எடுக்க முடியாததால் ஆத்திரம் அடைந்த மர்மநபர், அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் மின்சாதனங்களை சேதப்படுத்தினார்.

ரூ.5 லட்சம் தப்பியது

இந்த சம்பவம் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள இ-சர்வைலன்ஸ் கருவி மூலம் வங்கி மேலாளர் ஸ்ரீதருக்கு தெரியவந்தது. உடனே அவர், காரைக்கால் நகர போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் அங்கு மர்மநபர் யாரும் இல்லை. ஆனால் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது. ஏ.டி.எம். எந்திரத்தை திறக்க முடியாததால், அதனுள் வைத்திருந்த ரூ.5 லட்சம் தப்பியது.

இந்த கொள்ளை முயற்சி தொடர்பாக வங்கி மேலாளர் ஸ்ரீதர் காரைக்கால் நகர போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். கண்காணிப்பு கேமரா சேதப்படுத்தப்பட்டதால், மர்மநபரின் உருவம் சரியாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணை

எனவே அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

நகர பகுதியில் நடைபெற்ற இந்த துணிகர சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com